சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாட் நாட்டின் முன்னாள் அதிபர் கொரோனாவால் உயிரிழப்பு!

போர் குற்றங்களில் ஈடுபட்டு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சாட் நாட்டின் முன்னாள் அதிபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

சாட் நாடு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. 1982 முதல் 1990 வரை சாட் நாட்டின் அதிபராக ஹசனி ஹப்ரி(79) செயல்பட்டு வந்தார். இவர் தனது ஆட்சிகாலத்தில் பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டார். எதிர்க்கட்சியினருக்கு தூக்குத்தண்டனை விதித்தல் என பல்வேறு கொடூர செயல்களில் ஈடுபட்டார். இவரது ஆட்சி காலத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1990 ஆம் ஆண்டு சாட் நாட்டின் ஆட்சியை இட்ரிஸ் துபே இட்னோ என்பவர் கைப்பற்றினர். இதனால், அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசனி ஹப்ரி அண்டை நாடான செனிகல் நாட்டிற்கு தப்பிச்சென்றார்.

அதன் பின்னர், செனிகல் நாட்டின் ஒப்புதலுடன் ஹசனி ஹப்ரி மீதான மனித உரிமைகள் மீறல், போர் குற்றங்களை விசாரிக்க ஆப்ரிக்க யூனியன் தலைமையின் கீழ் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது. இந்த கோர்ட்டில் ஹசனி மீதான போர் குற்றங்கள் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அந்த விசாரணையில் 2016 ஆம் ஆண்டு ஹசனி மீதான போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஹசனி செனகலில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு போர் குற்றங்களுக்கான தண்டனை அனுபவித்து வந்தார். இதற்கிடையில், சிறைவாசம் அனுபவித்து வந்த ஹசனிக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அந்நாட்டின் தகர் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாட் முன்னாள் அதிபர் ஹசனி ஹப்ரி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!