சிக்கியது ரூ.2,340 கோடி கொகைன் போதைப்பொருள்… எங்கு எனத் தெரியுமா…?


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப்பொருட்களை ஒழித்துக்கட்டுவதில் அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் போதைப்பொருள் கடத்தல் மன்னன்களிடம் இருந்து 12 டன் கொகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்க சந்தை நிலவரப்படி 12 டன் கொகைன் போதைப்பொருளின் விலை 360 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,340 கோடி) ஆகும். அந்த நாட்டில் மிக அதிகளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

இது குறித்து அந்த நாட்டின் அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ் கூறுகையில், “பன்னாட்டு உளவு தகவல் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதற்காக போலீசாரைப் பாராட்டுகிறேன்.

இந்த நாட்டில் மிக அதிக அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருப்பது, புதிய வரலாறாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 3 நாட்கள் நடந்த இந்த போதைப்பொருள் கைப்பற்றுதல் நடவடிக்கையின்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் அதிகளவு கொகைன் போதைப்பொருள் உற்பத்தி செய்கிற நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று, அங்கு ஆண்டுக்கு 910 டன் கொகைன் உற்பத்தி ஆகிறது. இந்த ஆண்டில் அங்கு இதுவரை 362 டன் கொகைன் போதைப்பொருள், கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!