சீரடியில் உள்ள வாயில்லா ஜீவன்களும் சாய்பாபாவால் வசந்தத்தைப் பெற்றன!

பசியால் வாடும் உயிரினத்துக்கு அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அர்த்தமாகும் என்று சாய்பாபா அடிக்கடி சொல்வார். இதன் மூலம் ஏழைகளுக்கு உணவு கொடுத்து ஆதரிக்க வேண்டியதின் அவசியத்தை அவர் சீரடி மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.

சீரடியில் சாய்பாபா என்றைக்கு காலடி எடுத்து வைத்தாரோ, அன்றே நிறைய பேர் “ஆத்ம ஞானம்” பெற்று விட்டனர். மனிதர்கள் மட்டுமின்றி சீரடியில் உள்ள வாயில்லா ஜீவன்களும் சாய்பாபாவால் வசந்தத்தைப் பெற்றன. சீரடியில் உள்ள ஒவ்வொரு உயிரிடத்தும் பாபா அன்பை வெளிப்படுத்தினார். தினமும் 5 வீடுகளில் பிச்சை எடுத்து வரும் உணவை ஒன்றாக்கி கலக்கும் பாபா, அதை முதலில் வாயில்லா ஜீவன்களுக்குத் தான் கொடுத்தார்.

விலங்குகள், பறவைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளிடம் பாபா இரண்டற கலந்திருந்தார். இதற்கு கணக்கிட முடியாத அளவுக்கு உதாரணங்கள் உள்ளன. என்றாலும் சில சம்பவங்களை மட்டும் இங்கு காணலாம்.

சீரடியில் உள்ள ஜாக் என்ற பெண்மணி பாபா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். வீட்டில் என்ன சமைத்தாலும் அதை அவர் பாபாவுக்கு கொடுக்கத் தவறியதே இல்லை. அது போல பாபா அனுப்பி வைக்கும் பக்தர்களுக்கு முகம் சுழிக்காமல் விருந்தளித்து, உபசரித்து அனுப்பி வைப்பார்.

ஒருநாள் ஜாக் காலை உணவு தயார் செய்து பாபாவுக்கு எடுத்து வந்தார். அப்போது பாபா, “தாயே – . இன்று உன் வீட்டு வாசலுக்கு ஒரு எருமை மாடு வரும். அந்த மாடுக்கு நீ சப்பாத்தி – பருப்பு கொடுத்து உபசரிக்க வேண்டும்” என்றார்.

உடனே ஜாக், பாபாவைப் பார்த்து, “நல்ல நெய் ஊற்றி அருமையாக சப்பாத்தி உணவு தயாரித்து கொடுக்க நான் தயார். ஆனால் என் வீடு முன்பு அடிக்கடி நிறைய மாடுகள் போய் கொண்டிருக்கும். அதில் எந்த மாடு, நீங்கள் குறிப்பிடும் மாடு என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்றார்.

அதற்கு பாபா, “அது பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே. நீ எப்போது சப்பாத்தி உணவை தயார் செய்து முடிக்கிறாயோ… அப்போது உன் வீட்டின் பின்பக்க வாசல் முன்பு ஒரு மாடு வந்து நிற்கும். அதற்கு உணவளி” என்றார்.

சரி என்று கூறி விட்டு வீடு திரும்பிய ஜாக் நிறைய சப்பாத்தி செய்தார். வேலை முடிந்து பின்பக்க வாசலைத் திறந்தார். ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. ஜாக்கிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

மகிழ்ச்சிப் பொங்க வீட்டுக்குள் ஓடி சென்று சப்பாத்தி அனைத்தையும் எடுத்து வந்து அந்த எருமை மாட்டுக்கு கொடுத்தார். அதைத் தின்ற மாடு, அடுத்த சில நிமிடங்களில் ஜாக் வீடு வாசல் முன்பே விழுந்து செத்துப் போனது.

ஜாக்கிற்கு கை-கால் நடுங்கியது. பல்வேறு சிந்தனைகளுடன் பயந்தபடி பாபாவிடம் ஓடினார். நடந்தவற்றையெல்லாம் சொன்னார்.
அவரை ஆறுதல்படுத்திய பாபா, “இதுதான் அந்த (மாட்டு) ஆத்மாவின் விருப்பமாகும். உங்கள் கைப்பட சாப்பிட்டதால் அந்த மாடுக்கு நல்ல உயர்வான மறுபிறப்பு கிடைத்துள்ளது” என்று கூறி அனுப்பி வைத்தார்.

ஒரு தடவை சீரடி கிராம மக்கள் ஒரு நாயை விரட்டி, விரட்டி அடித்தபடி துரத்தினார்கள். அங்கும் – இங்கும் ஓடிய அந்த நாய் கடைசியில் துவாரகமாயிக்குள் ஓடி பாபாவிடம் தஞ்சமடைந்தது.

கிராம வாசிகள், “பாபா, அந்த நாய்க்கு வெறி பிடித்துள்ளது. விடுங்கள் அடித்துக் கொன்று விடலாம்” என்றனர். அதற்கு பாபா, “இது அப்பாவி ஆத்மா” என்று கூறி கிராம மக்களை எச்சரித்து அனுப்பினார். சில நாட்கள் கழித்து, பாபா சொன்னது உண்மை என்று மக்களுக்குத் தெரிய வந்தது.

ஒருநாள் லெண்டித் தோட்டத்தில் இருந்து பாபா மசூதிக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டு மந்தை ஒன்று அவர் எதிரே வந்தது. அதில் 2 ஆடுகள் பாபா கவனத்தை கவர்ந்தன. அந்த இரு ஆடுகளையும் ரூ.32 கொடுத்து பாபா வாங்கினார். பிறகு அவற்றுக்கு நிறைய பருப்பு உள்ளிட்ட உணவுகளை கொடுத்தார். இரு ஆடுகளும் வயிறார சாப்பிட்டன. பிறகு அந்த 2 ஆடுகளையும் மந்தையின் சொந்தக்காரனிடம் பாபா திருப்பிக் கொடுத்தார்.

பாபாவின் இந்த செயலைக் கண்டு சாமாவும், தாத்யா கோதேவும் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் பாபாவிடம், “ஏன் அப்படி செய்தீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு பாபா, “இந்த 2 ஆடுகளும் முற்பிறவி ஒன்றில் என் நண்பர்களாக இருந்தவர்கள். அண்ணன்- தம்பியான அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறி விட்டனர்.

தம்பி பணக்காரனாக மாறியதால் பொறாமை கொண்ட அண்ணன், அவனைக் கொல்ல முயன்றான். ஒரு தடவை அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி உயிரிழந்து, பிறகு ஆடுகளாக பிறவி எடுத்துள்ளனர்.

அவர்களைப் பார்த்ததும் எனக்கு முற்பிறவி நினைவுக்கு வந்தது. எனவே தான் அவர்களுக்கு உணவு கொடுத்து உபசரித்து அனுப்பி உள்ளேன்” என்றார்.

மற்றொரு நாள் பெரிய கருநாகம், ஒரு தவளையை வாயில் கவ்வி பிடித்திருந்தது. அதைப் பார்த்த பாபா, “என்னப்பா… நீங்க, இன்னும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க… வெட்கமா இல்லையா – போங்க, போங்க…” என்றார்.

பாபா இவ்வாறு சொன்னதும் அந்த கருநாகம் தவளையை விடுவித்தது. இரண்டும் ஆளுக்கு ஒரு திசை பக்கம் சென்று விட்டன. இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சீரடி மக்கள் அது பற்றி கேட்டபோது, “முற்பிறவியில் அவர்கள் இருவரும் வீரபத்ரா, சனபசப்பா என்ற பெயரில் இருந்தனர். அவர்களது சண்டை பிறவி, பிறவியாக தொடர்கிறது என்றார்.

ஒரு தடவை சீரடியில் சர்க்கஸ் நடந்தது. அதற்காக கொண்டு வரப்பட்ட புலி பாபாவை பார்த்ததும் மூன்று தடவை தன் வாலை தரையில் அடித்தது. பிறகு பாபா முன்பு உயிரை விட்டது. அந்த புலிக்கு பாபா முக்தி அளித்தார். தற்போதும் அந்த புலியின் சிலை சீரடி கோவிலில் உள்ளது.

துவாரகமாயில் ஒரு நாள் பாபா பக்தர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பல்லி சத்தம் செய்தது. அதை ஒரு பக்தர் அடித்து விரட்ட முயன்றார்.

அவரைத் தடுத்த பாபா, “அவுரங்காபாத்தில் இருந்து அதன் சகோதரி வருகிறாள். அதனால்தான் அது மகிழ்ச்சியில் சத்தம் போடுகிறது” என்றார். அதை கேட்டு சில பக்தர்கள் சிரித்தனர். பாபாவை கேலி செய்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் ஒரு பக்தர் வந்தார். பாபாவுக்கு பழ வகைகள் கொடுப்பதற்காக தனது மூட்டையை அவிழ்த்தார். அதில் இருந்து ஒரு பல்லி துள்ளிக் குதித்தது.

அது வேகமாக சுவரில் ஏறி, அங்கு ஏற்கனவே சத்தம் போட்டுக் கொண்டிருந்த பல்லியுடன் போய் சேர்ந்து கொண்டது. இருபல்லிகளும் அங்கும்-இங்குமாக ஓடி கொஞ்சிக் குலாவின. அது கண்டு ஆச்சரியமடைந்த பக்தர்கள், மூட்டையுடன் வந்த வரை பார்த்து, ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்’’ என்றனர். அதற்கு அவர், ‘‘அவுரங்காபாத்தில் இருந்து வருகிறேன்’’ என்றார். அதைக் கேட்டதும் பக்தர்கள் வாயடைத்துப் போனார்கள். இப்போது பாபா அவர்களைப் பார்த்து புன்னகைப் பூத்தார்.

சீரடியைச் சேர்ந்த தார்கட் என்ற பெண் மதிய உணவு சமைத்து கொண்டிருந்த வேளையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியில் எட்டிப்பார்த்தார். பிறகு ஒரு ரொட்டித் துண்டு எடுத்து வந்து நாய்க்கு போட்டார். அதை அந்த நாய் முழுமையாக சாப்பிட்டு விட்டுச் சென்றது.

அன்று மாலை தார்கட் துவாரக மாயிக்கு பாபாவை தரிசிக்க சென்றார். அவரைப் பார்த்த பாபா, ‘‘நீ கொடுத்த ரொட்டி நன்றாக இருந்தது’’ என்றார். தார்கட் எதுவும் புரியாமல் விழித்தார்.

அப்போது பாபா, ‘‘நாய் உருவத்தில் நான்தான் இருந்தேன்’’ என்றார். அதை கேட்டு பக்தர்கள் மெய் சிலிர்த்தனர்.
இந்த நிகழ்வு போல பல தடவை அவர் காகமாகவும், ஈயாகவும் மாறி பக்தர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அற்புதம் படைத்துள்ளார்.

1909-ம் ஆண்டு கசம் என்ற குதிரை வியாபாரி பாபாவுக்கு குதிரை ஒன்றை பரிசாக கொடுத்தார். பாபா அந்த குதிரைக்கு சியாம்சுந்தர் (கருப்பு அழகு) என்று பெயரிட்டார்.

சியாம் குதிரை பாபாவுடன் மிக பாசமாக பழகியது. பாபாவின் சாவடி ஊர்வலம் நடக்கும் போது அந்த குதிரைதான் முன்னால் செல்லும். பாபாவுக்கு ஆரத்தி பூஜை நடக்கும் போது அந்த குதிரை பாபாவை வணங்கும்.

பூஜை முடிந்ததும் சியாம் சுந்தர் குதிரைக்குத்தான் பாபா முதலில் உதியை பூசி விடுவார். அந்த அளவுக்கு வாயில்லா ஜீவன்களுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்தார். ஒருநாள் திடீரென பாபா அலறி துடித்தபடி ‘‘அய்யோ அடிக்கிறான் – அடிக்கிறான்’’ என்று சத்தமிட்டார்.

பக்தர்கள் ஓடி வந்து அவரிடம் ‘‘என்ன நடந்தது?’’ என்று விசாரித்தனர். அப்போது பாபா, ‘‘சியாம் சுந்தர் குதிரையை அதன் பாதுகாவலன் அடிக்கிறான். போய் தடுத்து நிறுத்துங்கள்’’ என்றார். எல்லோரும் லாயத்துக்கு ஓடினார்கள்.

அங்கு குதிரையை அந்த நபர் சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். குதிரை முதுகில் சாட்டையடி காயம் வரி, வரியாக இருந்தது. குதிரை பாதுகாவலரை எச்சரித்து விட்டு பக்தர்கள் துவாரகமாயிக்கு திரும்பினார்கள்.

அங்கு பாபா முதுகிலும், சியாம் குதிரை முதுகில் பட்டது போன்று வரி, வரியாக சாட்டையடி காயம் இருந்தது. அதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிகழ்வு மூலம் குதிரையோடு பாபா இரண்டற கலந்திருந்தது தெரிந்தது. எல்லா உயிர்களிடத்தும் வாழும் அந்த கண்கண்ட தெய்வத்தை கையெடுத்து கும்பிட்டனர்.

இப்படி எங்கும் வியாபித்துள்ள பாபாவை, திடீரென ஒருநாள் ஜவகர்அலி என்ற போலி குரு தன்னுடன் அழைத்து சென்று விட்டார். பாபாவை படாதபாடுபடுத்தினார். – Source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!