ஏழை – எளியவர்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவதை பாபா கண் இமைக்காமல் பார்ப்பார்.!

அன்னதானம் செய்யவேண்டும் என்று தன் பக்தர்களுக்குச் சொல்லும் பாபா பல முறை தானே முன்னின்று செய்திருக்கிறார். ஆம், சீரடி திருத்தலத்தில் பக்தர்களுக்கு தன்னுடைய கையாலே சாய்பாபா சமைத்துக்கொடுத்த சம்பவம் பல தடவை நடந்துள்ளது. திடீரென தானே சமைப்பது என்று பாபா முடிவெடுப்பார்.

அவர் உத்தரவிட்டால் சமைப்பதற்கும், உதவி செய்வதற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருந்தாலும், தானே சமையல் செய்வதில்தான் பாபாவுக்கு அதீத சந்தோஷம்.

கடை வீதிக்குச் சென்று தேவையான அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தானிய வகைகள், காய்கறிகள் என்று மூட்டை, மூட்டையாக வாங்குவார். எல்லா பொருட்களுக்கும் சரியாகப் பணம் கொடுத்து விடுவார். அந்த பொருட்களை கடை வீதியில் இருந்து மசூதிக்கு வண்டியில் வைத்து எடுத்து வருவார். மசூதியில் அந்த உணவுப் பொருட்களை சுத்தம் செய்வார். கோதுமையை அரைக்க வேண்டும் என்றால் தாமே அரைப்பார். மற்றவர்கள் உதவியை பெரும்பாலும் ஏற்க மாட்டார். சமையலுக்குப் பொருட்கள் தயாரானதும் மசூதிக்கு எதிரில் உள்ள அகன்ற மைதானத்தில் சமையலை தொடங்குவார். சமைப்பதற்கு 2 பெரிய ஹண்டி என்ற பாத்திரங்களை சாய்பாபா வைத்திருந்தார். இந்த பாத்திரத்தில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு சமைக்க முடியும்.

பாபா சமைக்கும் சர்க்கரைப் பொங்கல் மிக, மிக ருசியாக இருக்கும். அவரைக்காயைப் பயன்படுத்தி சூப் தயாரிப்பார். அந்த சூப்பில் கோதுமை மாவை சிறு, சிறு உருண்டைகளாகப் பிடித்து போட்டு மிதக்க விடுவார். அல்லது கோதுமையை தட்டை ரொட்டிகளாக தயாரித்து மிதக்க விடுவார்.

பாத்திரத்தில் உணவு சரியான பக்குவத்துக்கு வந்து விட்டதா என்பதை அறிய, கரண்டியை விட்டு கிளறி, எடுத்துப் பார்ப்பதுதான் மக்களின் பொதுவான வழக்கம். ஆனால் பாபா அவ்வாறு செய்ய மாட்டார். தனது கையை உணவு கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்துக்குள் விட்டு கலக்குவார். தொடவே முடியாத அந்த பாத்திரத்தின் சூட்டை மீறி உணவை கையால் கிளறி விடுவார். பாத்திரத்தின் அடிப்பாகத்தில் இருந்து உணவை எடுத்துப் பார்ப்பார்.

சாதாரண மனிதனால் அந்த பாத்திரத்தை வெறும் கையால் தொடவே முடியாது. ஆனால் பாபா சிரித்த முகத்துடன் உணவைக் கிண்டுவார். அவருக்கு எதுவுமே ஆகாது. புன்முறுவல் பூத்தபடி அவர் சமைப்பதைக் கண்டு பக்தர்கள் மெய் மறந்து போவார்கள். உணவு சமைத்து முடித்ததும், முதலில் கடவுளுக்கு படைத்து பூஜைகள் நடத்தப்படும். பிறகு பக்தர்களை வரிசையாக உட்கார வைத்து, பாபாவே தம் கைப்பட உணவுகளை எடுத்து வைப்பார்.

வேண்டும் அளவுக்கு சாப்பிடுங்கள் என்று உணவு வகைகளை அன்புடன் கலந்து கொடுப்பார். அவர் உணவு வழங்கும் போது பிச்சைக்காரர்களும், ஏழைகளும் வரிசையில் இருப்பதுண்டு. அவர்களுக்கு கருணையோடு உணவு கொடுப்பார். ஏழை – எளியவர்கள் ரசித்து – ருசித்து சாப்பிடுவதை பாபா கண் இமைக்காமல் பார்ப்பார். ஏழைகள் வயிறு நிறைந்து விட்டது என்பதை குறிப்பால் உணரும் போது பாபா மிகவும் மகிழ்ச்சி அடைவார். சிலருக்கு அவர் தம் கையால் உணவை எடுத்து ஊட்டி விட்டதும் உண்டு. – Source: timestamil * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!