உடலை துறப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பு பாபா நடத்திய அதிசயம் ..!

என் நாமத்தை உச்சரிப்போருக்கும், வேறு எதையும் நினைக்காமல் என்னையே துதிப்போருக்கும், என் வாழ்க்கையையும், என் லீலைகளை மட்டுமே மனதில் நிறுத்துவோருக்கும், இப்படி என்னை மட்டுமே தானாக ஆக்கிக் கொள்வோருக்கு உலகியியலின் இருப்பும், உணர்தலும் நீடிக்குமா என்ன? இத்தகைய உயர் பக்தர்களை மரணம் எனும் கோரப் பிடியில் இருந்து நான் லாவகமாகப் பிரித்து எடுத்து விடுவேன் என்று சாய்பாபா தம் பக்தர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.

“எவன் என்னை தன் வாழ்க்கை முடியும் தருவாயில் நினைக்கிறானோ, அவன் உண்மையில் என்னிடமே வருகிறான்” என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார். இதையேத்தான் சீரடி சாய்பாபாவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் உலகில் இதற்கான யதார்த்தம் எப்படி உள்ளது? நம்மில் பெரும் பாலானவர்கள் மரணம் என்றதும் பயந்து, நடுங்கி விடுகிறோம். ஏனெனில் மரணத்தை எதிர்கொள்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. மரணத்தை நெருங்கும் ஒருவர் அந்த சமயத்தில் அது பற்றி பயம் கொள்ளாமல், குழப்பம் அடையாமல், இறைவனை நினைத் தாலே போதும், அவர் களுக்கு உயர்நிலை கிடைக்கும். மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது நமது ஆத்மாவை நாம் இறைவனின் காலடியில் ஒப்படைத்து விட வேண்டும்.

அப்படி நம்மை நாமே ஒப்படைத்துக் கொண்டால் நம்மை இறைவன் வழி நடத்துவார். இதை நன்கு உணர்ந்த பலர், சாய்பாபா முன்பு தங்கள் உயிரைப் பிரித்துள்ளனர். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. என்றாலும் சென்னையைச் சேர்ந்த சன்னியாசி விஜயானந்த் சீரடி சென்று உயிர் துறந்ததை பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

சன்னியாசி விஜயானந்த் ஒரு தடவை சென்னையில் இருந்து மானசரோவருக்கு யாத்திரைப் புறப்பட்டார். மராட்டியம் மாநிலம் வழியாக அவர் சென்று கொண்டிருந்தபோது சீரடியில் அருளாட்சி செய்து வரும் சாய்பாபாவின் மகிமைகள் பற்றி கேள்விப்பட்டார். எனவே சீரடிக்கு சென்று பாபாவை தரிசனம் செய்து விட்டு, யாத்திரையைத் தொடரலாம் என்று அவர் நினைத்தார். அதன்படி விரைவில் சீரடி போய் சேர்ந்தார்.

அங்கு ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ் சுவாமி என்பவரை விஜயானந்த் சந்தித்தார். அவரிடம் மானசரோவருக்கு எப்படி செல்வது என்று விசாரித்தார்.
அதற்கு சோமதேவ் சுவாமிகள், மானசரோவர், சங்கோத்ரி யில் இருந்து சுமார் 500 மைல் உயரத்தில் உள்ளது. அங்கு ஏராளமான பனி படர்ந்து இருக்கும் என்றார்.
மேலும் மானசரோவர் செல்லும் வழியில் பூடான் மக்கள் யாத்ரீகர்களை சந்தேகத்துடனே பார்ப்பார்கள். அவர்களால் இடையூறும் ஏற்படும் என்று கூறினார்.
இதைக் கேட்டதும் விஜயானந்துக்கு மனதில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. மானசரோவருக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என்று தவிப்புக்குள்ளானார். நீண்ட மனப் போராட்டத்துக்குப் பிறகு அவர் மானசரோவர் செல்லும் திட்டத்தை கைவிட்டார்.

பிறகு அவர் மசூதிக்கு சென்று சாய்பாபாவை கண்டு பணிந்து வணங்கி நின்றார். அவரைப் பார்த்த மனுவினாடி பாபாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
“இந்த துறவியை இங்கிருந்து விரட்டுங்கள்” என்று ஆவேசமாக கர்ஜித்தார். ஆனால் சன்னியாசி விஜயானந்த் பயப்படவில்லை. மசூதியை விட்டு வெளியேறவும் இல்லை.பாபாவையே உற்றுப் பார்த்தப்படி நின்றார். பாபாவுக்கு செய்யப்படும் ஆரத்தியை கண்டு களித்தார். பாபா தன்னை ஆசீர்வதிக்கவில்லையே என்று அவர் மனம் சற்று சோர்வு அடைந்திருந்தது.

ஆனால் அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. மறுநாளும் காலையிலேயே அவர் மசூதிக்கு வந்து விட்டார். பாபாவுக்கு நடந்த காலை நேர ஆரத்தியைப் பார்த்தார். ஒவ்வொரு பக்தரும் ஒவ்வொரு விதமான செயல்களில் ஈடுபட்டிருந்தனர். ஒருவர் பாபா உடம்பில் சந்தனம் பூசினார். மற்றொருவர் நறுமணப் பொருட்களைத் தடவி விட்டார்.

சிலர் பாபாவின் கால்களை கழுவி பாத பூஜை நடத்தி ஆராதனை செய்தனர். ஒரு பக்தர் பாபா கட்டை விரலில் இருந்து வழிந்த புனித நீரை எடுத்து பாபாவைப் பார்த்து வணங்கி விட்டு அருந்தினார். ஆராதனைகள் அனைத்தையும் மவுனமாக அமர்ந்து ஏற்றுக் கொண்டிருந்த பாபாவின் பார்வை சென்னை சன்னியாசி விஜயானந்த் மீதும் பதிந்தது. இன்று அவர் எதுவும் சொல்லவில்லை. கோபப்படவுமில்லை.

இதனால் அவர் மசூதியிலேயே அமர்ந்தார். 2 நாட்கள் கழிந்தது. துறவி விஜயானந்துக்கு சென்னையில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தைப் படித்த வித்யானந்தாவுக்கு உடனே சென்னை செல்ல மனம் ஏங்கியது.

சீரடிக்கு வந்தவர்கள் நினைத்தவுடன் புறப்பட்டு செல்ல முடியாதே? அவர் பாபாவிடம் சென்று கடித விபரத்தைக் கூறி தன்னை புறப்பட அனுமதிக்குமாறு வேண்டினார். பாபா அவரிடம், “நீ உன் தாயாரை இந்த அளவுக்கு நேசிக்கும்போது ஏன் துறவை மேற்கொண்டாய்? சொந்த பந்தங்களும், ஆசாபாசங்களும் காவி உடை அணிபவர்களுக்கு ஒத்து வராது. உன்னுடைய இருப்பிடத்துக்கு சென்று அமைதியாக அமர்ந்து பொறுமையுடன் காத்திரு. சில நாட்கள் அமைதியாக இரு.
உனது முந்தைய நல் வினைகள் அதிகம் உள்ளன. அதனால்தான் நீ இங்கு வந்துள்ளாய். இப்போது நான் சொல்வதை கவனமாகக் கேள்.

உனது அந்திமக்காலம் வந்து விட்டது. செல்வமும், சுபீட்சமும் நிலையற்றவை. உன் உடல் அழியக்கூடியது. எனவே ஆசைகளை முழுமையாக துறந்து கடமையைச் செய்.

எவன் ஹரியின் பாதங்களில் சரண் அடை கிறானோ, அவன் பேரானந்த பெரு நிலையைப் பெற முடியும். அன்போடு அவர் நாமத்தைச் சொல். பரமாத்மா உனக்கு ஓடி வந்து உதவுவார். எனவே ஆசைகளைத் துறந்து விட்டு, நாளை முதல் பாகவதத்தை பாராயணம் செய். மூன்று வாரம் மூன்று தடவை பாராயணம் செய். உனது துன்பங்கள் விலகும். நீ அமைதி பெறுவாய்” என்றார்.

அதை சன்னியாசி விஜயானந்த் ஏற்றுக் கொண்டார். மறுநாள் அதிகாலை எழுந்து குளித்து, மற்ற சம்பிரதாயங்களைச் செய்து முடித்து விட்டு லெண்டித் தோட்டத்துக்கு சென்றார். அங்கு ஒரு தனிமையான இடத்தில் சென்று மனதை அமைதிப்படுத்திக் கொண்டு பாகவதத்தை பாராயணம் செய்யத் தொடங்கினார்.
இரண்டு தடவை அவர் பாகவதத்தை முழுமையாகப் பாராயணம் செய்து முடித்திருந்தார். மூன்றாவது முறையாக பாராயணம் செய்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

வாதாவுக்கு திரும்பி வந்தார். தமது அறையிலேயே தங்கி இருந்தார். மூன்றாவது நாள் அவர் பக்கீர் பாபா என்ற படே பாபாவின் மடியில் தன் உயிரை விட்டார்.
அவர் உடலை ஒரு நாள் வைத்திருக்கும்படி சாய்பாபா உத்தரவிட்டார். போலீசார் வந்து விசாரணை நடத்திய பிறகு சன்னியாசி விஜயானந்த்தின் உடல் சீரடியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அந்த துறவி உயிர் பிரியும் நாளில் பாபா அவருக்கு நற்கதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று ஒரு புலிக்கும் சாய்பாபா முக்தி அளித்தார். சாய்பாபா தன் உடலை துறப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பு அந்த அதிசயம் நடந்தது. ஒரு நாள் ஒரு பெரிய சர்க்கஸ் கூடார வண்டியில் புலி ஒன்று ஏற்றி சீரடிக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. பாபா வசிக்கும் மசூதி முன்பு அந்த புலிக் கூண்டு வண்டி வந்து நின்றது.

ஊர்& ஊராக கொண்டு செல்லப்பட்டு வித்தை காட்டி இருந்ததால், அந்த புலி சோர்வடைந்து கடும் வேதனையுடன் காணப்பட்டது. அந்த புலியைத் தேற்ற எவ்வளவோ சிகிச்சைகள் அளித்தும் பலன் கிடைக்கவில்லை.

பாபாவிடம் காண்பித்தால் புலியிடம் ஏற்பட்டுள்ள சோர்வு நீங்கி விடும் என்று பலரும் சொல்ல அவர்கள் புலியுடன் சீரடி வந்திருந்தனர். புலியைக் கூண்டில் இருந்து கீழே இறக்கி மசூதி வாசலில் நிற்க வைத்தனர். அன்று மசூதிக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அந்த புலியை ஆச்சரியத்துடன் பார்த்தப்படி நின்றனர்.

மசூதி வாசலில் இருந்து புலி உள்ளே நுழைந்து, பாபாவைப் பார்த்த மறுவினாடி புலி தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது. பிறகு பாபா அருகில் மெல்ல நடந்து சென்றது. பாபாவை பார்த்துக் கொண்டே தனது வாலை தரையில் அடித்தது. மூன்று முறை அது தன் வாலை தரையில் அடித்தது. அடுத்த வினாடி அந்த புலி அப்படியே தரையில் சரிந்து விழுந்தது.

பாபா பார்வைப்பட்ட ஓரிரு நிமிடங்களில் புலி இறந்து விட்டதைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். புலியைக் கொண்டு வந்திருந்த சர்க்கஸ் கூடார ஊழியர்கள் கண்ணீர் விட்டனர். பாபா முன்னிலையில் உயிர்நீத்த அந்த புலி நற்கதி அடைந்து விட்டதாக பக்தர்கள் கூறினார்கள். இதற்கு முன்பு மேகா என்பவரும் பாபா ஆசியால் முக்தி பெற்றதை படித்தீர்கள். தாத்யா சாகேப் நூல்கர் என்பவரும் இவ்வாறு சீரடியில் உயிர் நீத்தார். – Source: Maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!