மத விரிவுரை நிகழ்ச்சியில் பாதி நேரத்தில் தப்பியோடிய சிறுவனுக்கு நிகழ்ந்த கொடூரம்…!


பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் மத விரிவுரையில் பங்கேற்காமல் தப்பிச் சென்ற சிறுவனை அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் ஏழை மக்களில் பலர் தங்களது வறுமை நிலையால் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. இவர்களை குறிவைத்து சில இஸ்லாமிய பிரசாரகர்கள் ஆங்காங்கே மத விரிவுரை பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் சில பிள்ளைகளை மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றி விடுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் சிறுவர்களை சங்கிலியால் கட்டிவைத்து சிறைபிடித்து மதப் பிரசாரம் செய்யப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பின் காசிம் நகர் பகுதியில் காரி நஜ்முதீன் என்பவர் நடத்திய மத விரிவுரை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் முஹம்மது ஹுசேன் என்ற 8 வயது சிறுவன் பாதி நிகழ்ச்சியில் அங்கிருந்து தப்பியோட்டம் பிடித்தான்.

அவனது பெற்றோர் முஹம்மது ஹுசேனை பிடித்துவந்து மீண்டும் காரி நஜ்முதீனிடம் ஒப்படைத்தனர். தனது உபதேசத்தை கேட்காமல் தப்பியோடிய சிறுவன்மீது ஆத்திரமடைந்த நஜ்முதீன் அவனை தடி மற்றும் இதர ஆயுதங்களால் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த முஹம்மது ஹுசேன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து, மத பிரசாரகர் காரி நஜீமுதீனை கைது செய்த போலீசார் அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05