சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்களின் ஊழல் மோசடிகள் – ஆதாரத்துடன் தயாராகிறது ஐதேக…!


சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேர் மற்றும் ஒரு முதலமைச்சருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கையளிக்கவுள்ளனர்.

கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐதேகவுக்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. ஐதேகவை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தாக்கி வருகின்றனர். ஐதேகவினர் சிறிலங்கா அதிபர் மீதும் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதனால் அரசாங்கத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட நிலையில், சிறிலங்கா அதிபருக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துமாறு ஐதேகவினருக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் ஐதேகவினரை திருடர்கள் என்று விமர்சித்து வரும் நிலையில், ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களுடன் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் 10 அமைச்சர்கள் மற்றும் ஒரு முதலமைச்சர் தொடர்பான ஆவணங்கள் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்று ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தபோது, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் செய்த மோசடிகள், ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதும் இந்த அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இந்த ஆவணங்களை தாம், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடமும் கையளிக்கவுள்ளதாக சமிந்த விஜேசிறி கூறினார். – Source: puthinappalakai.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH