சாய்பாபா பக்தர்களுக்கு வழங்கிய இரண்டு உபதேச மந்திரங்கள்..!

நம்பிக்கை என்பது மனிதர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று. நம்பிக்கையில்லாவிட்டால், வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். மனிதர்கள் தங்களிடம் நம்பிக்கை வைத்திருப்பதுடன், தங்களுக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் விளங்குபவர்களிடமும் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். முக்கியமாக, நம்முடைய ஆன்மிக முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக இருக்கும் குருவிடம் அசாத்தியமான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஒரு சத்குருவானவர், தம்முடைய பக்தர்கள், தம்மிடம் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக பல லீலைகளைச் செய்கிறார். ஷீரடி சாய்பாபாவும் தம்முடைய பக்தர்கள் தம்மிடம் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகப் பல லீலைகளைச் செய்திருக்கிறார். இங்கே சில லீலைகளைப் பார்ப்போம்.

பாபா, தன் பக்தர்கள் சிலரிடம் தட்சிணை வாங்குவது வழக்கம்.அவருக்குத் தாங்கள் அளிக்கும் தட்சிணையால் தங்கள் பாவங்கள் குறைகின்றன என்பது அவர்களின் நம்பிக்கை. பிரதான் என்பவர் அவரது பக்தர்களில் ஒருவர். இவர் ஒருமுறை பாபாவை தரிசிக்க ஷீரடிக்குச் சென்றார். ஷீரடிக்குச் செல்லும்போது, தன்னிடம் நான்கு சவரன் மதிப்புள்ள தங்கத்தையும், மூன்று ரூபாய் நோட்டுகளையும் வைத்திருந்தார். அப்போது அவருடைய மனதில் பாபாவுக்கு தட்சிணை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே, தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுகளில் ஒன்றைக் கொடுத்து வெள்ளி நாணயங்களாக மாற்றிக்கொண்டார். பின்னர் பாபாவை தரிசிக்கச் சென்றார்.

அவர் துவாரகாமாயிக்குச் சென்று சாய்பாபாவை வணங்கி, அவருக்கு மாலை, பழங்கள் ஆகியவற்றைப் படைத்து அவரிடமிருந்து ஆசி பெற்றார். பின்னர் அவருக்கு தட்சிணை கொடுக்க நினைத்தவர், தன் பையிலிருந்து முதலில் நான்கு சவரன் மதிப்புள்ள தங்கத்தை எடுத்து பாபாவின் பாதத்தில் வைத்தார். சாய்பாபா அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, அது தமக்கு வேண்டாம் என்று கூறி திருப்பி அளித்துவிட்டார். பின்னர், பிரதான் தன்னிடம் இருந்த வெள்ளி நாணயங்களிலிருந்து பதினைந்து வெள்ளி நாணயங்களை எடுத்து பாபாவிடம் அளித்தார். அதனைப் பெற்றுக்கொண்டவர், ‘அது எவ்வளவு மதிப்புடையது?’ என்று பிரதானிடம் வினவினார். அதற்கு பதினைந்து ரூபாய் என்ற பதில் கிடைத்தது. அந்த நாணயங்களை எண்ணுவதைப்போல் பாவனை செய்து அதில் வெறும் பத்து ரூபாயே இருப்பதாகக் கூறினார். இதைக் கேட்ட பிரதான், பதில் ஏதும் கூறாமல் தன்னிடம் மீதம் உள்ள ஐந்து வெள்ளி நாணயங்களையும் அளித்தார். அதைப் பெற்றதும் சாய்பாபா திருப்தியடைந்தவராக தன் அருள் நல்கும் கரத்தை அவரின் தலையில் வைத்து ஆசி வழங்கினார். தான் மனதில் நினைத்தபடியே இருபது வெள்ளி நாணயங்களை தட்சிணையாகப் பெற்றுக்கொண்டதை எண்ணி பிரதான் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சாய்பாபாவின் இந்த லீலையானது, பிரதான் கொண்டிருந்த நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

மற்றொரு பக்தரின் கதையைப் பார்ப்போம்…

சோல்கர் என்பவர் சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருடைய குடும்பமோ மிகவும் பெரியது. வருமானமோ குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. ஒருமுறை பூனேவில் தாஸ்கணு என்பவர் பாபாவைப் பற்றிய பக்திச் சொற்பொழிவு நிகழ்த்தியதை சோல்கர் கேட்க நேர்ந்தது. அவரின் மகிமைகளைக் கேட்ட சோல்கருக்கு பக்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அவர் பாபாவை மானசீகமாக வழிபட்டு, தான் நிரந்த உத்தியோகம் பெற்றால், ஷீரடிக்கு வந்து பாபாவைத் தரிசித்து, கற்கண்டை விநியோகிப்பதாக வேண்டிக்கொண்டார்.

பாபாவின் அருள் அவருக்குப் பூரணமாக இருக்கவே, விரைவிலேயே அவருடைய பணி நிரந்தரமானது. ஆனால், பெருங்குடும்பத்தைத் தாங்கவேண்டியிருந்ததால் அவரால் ஷீரடி பயணத்துக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை. எப்படியும் ஷீரடிக்குச் சென்று அவரைத் தரிசிக்க வேண்டும் என்று எண்ணிய சோல்கர், தன்னுடைய உணவில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் பணத்தை சேமிக்க எண்ணினார். அவ்வாறே உணவையும் தேநீரையும் சர்க்கரையில்லாமலே உட்கொண்டார்.

ஷீரடிக்குச் செல்வதற்குத் தேவையான பணத்தை சேமிக்க முடிந்ததும், சிறிதும் தாமதம் செய்யாமல் ஷீரடிக்குப் புறப்பட்டார். செல்லும்போது நிறைய கற்கண்டையும் வாங்கிக்கொண்டார். ஷீரடிக்குச் சென்ற சோல்கர், ஜோக் என்பவரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். மறுநாள் காலை நண்பருடன் துவாரகாமாயிக்குச் சென்றார். அவரது தரிசனத்தால் பெரிதும் மகிழ்ச்சியும் பரவசமும் கொண்ட சோல்கர், அவரின் திருநாமத்தை உச்சரித்தபடி கற்கண்டுகளை விநியோகித்தார். பின்னர் இருவரும் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்படும் தருணத்தில், சாய்பாபா சோல்கரின் நண்பர் ஜோக்கிடம், ‘சோல்கருக்கு சர்க்கரை அதிகம் சேர்த்த தேநீரைக் கொடு’ என்று கூறினார்.

அவரது வார்த்தைகளைக் கேட்டு இருவரும் மிகவும் மனம் மகிழ்ந்தனர். சோல்கர், தான் உணவில் சர்க்கரை பயன்படுத்துவதில்லை என்ற தனது ரகசியத் தீர்மானத்தை அவர் அறிந்திருப்பதைக் கண்டு மிகவும் வியப்படைந்தார். மறுபடியும் பாபாவின் திருவடிகளில் விழுந்து வணங்கிய சோல்கருக்கு பாபா உதியை அளித்து ஆசீர்வதித்தார்.

சாய்பாபா தம்முடைய பக்தர்களுக்கு வழங்கிய இரண்டு உபதேச மந்திரங்கள்… நம்பிக்கையும் பொறுமையும்தானே.- Source: vikatan * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!