வரதட்சணை கேட்டு கொடுமை… கணவர் மீது கர்நாடக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பரபர புகார்..!


இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கர்நாடக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநில ஆயுதப்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் வர்த்திகா கட்டியார் (வயது 34). ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் குடகு, தார்வார் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றி உள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு வர்த்திகா கட்டியார், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான நித்தீன் சுபாஷ் என்பவரை திருமணம் செய்து இருந்தார். நித்தீன் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர் ஆவார். தற்போது டெல்லியில் அவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் வர்த்திகா கட்டியார் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் நித்தீன் சுபாஷ், தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-

“இந்திய வெளியுறவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் மராட்டியத்தை சேர்ந்த நித்தீன் சுபாஷ் என்பவருடன் எனக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நித்தீனின் குடும்பத்தினர் அதிக நகை, பணத்தை வரதட்சணையாக எதிர்பார்த்தனர். வரதட்சணை கொடுக்காவிட்டால் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என்று கூறினர். இதனால் அவர்களுக்கு நான் ரூ.3 லட்சம் கொடுத்து இருந்தேன்.

கடந்த 2012-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் வசித்து வரும் எனது பாட்டியை ஏமாற்றி காசோலையில் கையெழுத்து வாங்கி ரூ.5 லட்சத்தை எடுத்து நித்தீன் மோசடி செய்து இருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது என்னை அடித்து உதைத்தார். கடந்த 2016-ம் ஆண்டு கொழும்புக்கு நான் சென்று இருந்த போது வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் என்னை கட்டையால் அவர் அடித்தார். இதில் எனது கை முறிந்து போனது. 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு பரிசு அனுப்பவில்லை என்று கூறி என்னை விவாகரத்து செய்ய உள்ளதாக நித்தீன் கூறினார்.

அவருக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த சுபாஷி, அமோல், சுனிதா, சச்சின், பிரஜக்தா, உறவினர் ஒருவர் ஆகியோர் ஆதரவாக உள்ளனர். அவர்களும் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர். அவர்களால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நான் தொல்லை அனுபவித்து வருகிறேன். தற்போது புதிதாக வீடு வாங்க ரூ.35 லட்சம் கேட்டு என்னை கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் நித்தீன் சுபாஷ் உள்பட 7 பேர் மீது வரதட்சணை கொடுமை, உயிருக்கு அச்சுறுத்தல், மோசடி செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!