கடற்படை மாலுமியை உயிரோடு கொளுத்திய கும்பல் – மராட்டியத்தில் கொடூரம்..!


ரூ.10 லட்சம் கேட்டு தராததால் சென்னையில் இருந்து கடற்படை மாலுமியை மராட்டிய மாநிலம் பால்கருக்கு கடத்திவந்து உயிரோடு தீ வைத்து எரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பால்கர் மாவட்டம் கோல்வாட் பகுதியில் ஒருவர் உடலில் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக அப்பகுதி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 90 சதவீதம் உடல் கருகிய நிலையில் அவர் மும்பை கொலாபாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக இறப்பதற்கு முன்பு அந்த நபர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் படி அவர் ஜார்க்கண்ட மாநிலம் ராஞ்சியை சேர்ந்த சூரஜ்குமார் குப்தா(வயது27) என்பதும், கடற்படை மாலுமியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் சென்னையில் இருந்து கடத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.

3 பேருக்கு வலைவீச்சு
அதாவது சூரஜ்குமார் குப்தா கடந்த மாதம் 30-ந்தேதி விமானம் மூலம் சென்னை சென்றுள்ளார். அப்போது, சென்னையில் அவரை 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்தினர். மேலும் அவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் சூரஜ்குமார் குப்தாவை பால்கர் மாவட்டம் கோல்வாடிக்கு கடத்தி வந்து, துன்புறுத்தி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச்சென்றனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த தகவல்கள் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்தது. இருப்பினும் அவர் எப்படி சென்னையில் இருந்து பால்கர் பகுதிக்கு கடத்தப்பட்டார் என்ற தகவல்கள் தெரியவரவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கடத்தி தீ வைத்து எரித்து கொன்ற 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

கடற்படை மாலுமி ஒருவர் சென்னையில் இருந்து கடத்திவந்து மராட்டியத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!