அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக தமிழர் நியமனம்


அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக தமிழர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திருச்சி என்.ஐ.டி.யில் படித்தவர் ஆவார்.

அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக ராஜ் அய்யர் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழரான இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1992 வரை திருச்சி என்.ஐ.டி.யில் (அப்போது ஆர்.இ.சி என்ற பெயரில் இருந்தது) எலக்டிரிக்கல் அண்ட் எலக்டிரானிக்ஸ் பிரிவில் (இ.இ.இ.) பி.டெக் படித்து உள்ளார்.

படிப்பு முடிந்த பின்னர் பெங்களூருவில் பணியாற்றிய இவர் மின் பொறியியல் துறையில் ஆராய்ச்சி முடித்து முனைவர் பட்டம் பெற்று உள்ளார். அதன் பின்னர் அமெரிக்காவிற்கு சென்ற அவர் அங்குள்ள ராணுவத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அவரை தற்போது அமெரிக்க அரசு அந்நாட்டு ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக நியமித்து உள்ளது.

உலக வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக தமிழர் நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என தெரிகிறது. என்.ஐ.டி. முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ராஜ் அய்யரின் மனைவி பிருந்தாவும் அமெரிக்க அரசில் தகவல் தொழில் நுட்ப பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!