என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் துயரங்களை இறக்கி வையுங்கள்..!


பாபா…உலகில் நடக்கும் அனைத்தையும் அறிந்துணரும் ஞானம் கொண்டவர். உலகின் ஏதோ ஓர் மூலையில் தன்னுடைய பக்தனுக்கு நேரவிருக்கும் துன்பத்தை உணர்ந்துஅவர் இருக்கும் இடத்தில் இருந்தே அந்தப் பக்தனைக் காப்பாற்றும் வல்லமை கொண்டவர். இதற்காக இவர் செய்யும் பிரத்யேகமான செயல்கள் அங்கிருப்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். நம்மோடு நன்றாக உரையாடிக்கொண்டிருந்தவர் திடீரென்று ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார் என்ற எண்ணம் அங்கிருப்பவர்களுக்கு ஏற்படும். பாபா சகஜநிலைக்கு வந்தாலும் அவரிடம் எதுவும் கேட்கமாட்டார்கள்.

ஒன்று பாபாவுக்கு தன்னை இவர்கள் நம்பவில்லை போலும் என்ற எண்ணம் உண்டாகிவிடுமோ என்னும் பயம். மற்றொன்று உண்மையிலே இவர் சொல்வது போல் இருக்குமோ என்று அவர்களை மீறி பாபா மேல் ஏற்படும் ஐயம். ஆனால் இவையனைத்தையும் பாபா அறிந்தாலும் பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய செயல்களுக்கான விளக்கத்தைச் சொல்லிவிடுவார். அந்த பக்தனாலேயே அவையில் பாபா தன்னை காத்தமைக்கு நன்றி செலுத்தும் போது அங்கு சுற்றியிருப்பவர்கள் உணருவார்கள். இது அவ்வப்போது உணருவதுதான். ஆனால் மனிதனை தாண்டி சிறு உயிரினங்களின் சுக துக்கங்களையும் அறிந்து உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் கடவுள் அவரே என்பதையும் ஒருமுறை நிரூபித்தார்.


ஒருநாள் பாபா மசூதியில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றியிருந்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், துயரங்களிலிருந்து பாபா காப்பாற்றியதையும் பெருமைபட பாடிக்கொண்டும், உற்சாகத்தோடு கூவிக்கொண்டும் இருந்தனர். ஆனால் அவர்களது பேச்சுகளின் போது இடைவிடாமல் சுவற்றில் இருந்த பல்லி ஒன்று சத்தமிட்டுக்கொண்டே இருந்தது. அவர்களுக்கு இது எரிச்சலை உண்டாக்கியது. பாபாவும் பல்லியைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தார். என்ன பாபா உங்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம். அதைத் தடுக்கும் வகையில் கத்திக் கொண்டிருக்கும் பல்லியைப் பார்த்து சிரிக்கிறீர்களே என்றனர். மேலும் பல்லி ஓயாமல் சத்தமிடுகிறதே.. இது நன்மைக்கா.. அல்லாது ஏதாவது அபசகுணமாக கத்துகிறதா? ஏன் இப்படி சத்தமிடுகிறது? என்றூ அடுக்கடுக்காக கேட்டனர்.

வேறோன்றுமில்லை பல்லியின் உடன்பிறப்பு இங்கிருந்து சுமார் 400 மைல் தொலைவில் வசித்துவருகிறது. இன்று இதைப் பார்க்க இங்கு வரவிருக்கிறது. அதனால் தான் இந்த பல்லி மகிழ்ச்சியில் சத்தமிடுகிறது என்றார். எல்லோருக்கும் ஆச்சரியமாகிவிட்டது. பாபா.. நம்மிடம் விளையாடுகிறாரா? பல்லிக்கு எப்படி தெரியும் தூரத்தில் இருக்கும் பல்லி தன்னை பார்க்கவருகிறது என்று…அப்படியே இருந்தாலும் அது எப்படி வரமுடியும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.ஆனாலும் பாபாவிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. மணித்துளிகள் கடந்தது.


சிறிது நேரத்தில் பக்தர் ஒருவர் குதிரைவண்டியில் வந்து இறங்கினார். தாம் நீண்ட தொலைவிலிருந்து பாபாவைக் காண வந்திருப்பதாக கூறினார். பாபாவுக்கு பழங்களும், பிரசாதங்களும் கொண்டு வந்து இறக்கிய வண்டிக்காரன் தான் குதிரைக்கு கொள்ளு வாங்க செல்வதாக கூறினான். அதற்கு இப்போது என்ன அவசரம் என்று வண்டி உரிமையாளர் கேட்டார். ஏற்கனவே 400 மைல் கடந்துவிட்டோம். அதனால் உணவு வாங்கி வந்துவிடுகிறேன் என்றபடி வண்டியில் இருந்த சாக்கை எடுத்து உதறினான். சாக்கில் இருந்த பல்லி ஒன்று வேகமாக ஓடியபடி சற்று முன்பு கத்திய பல்லியின் அருகில் சென்றுவிட்டது. நடப்பதையெல்லாம் சுற்றியிருந்தவர்கள் பிரமிப்பாக பார்த்துக்கொண்டிருந்தனர். பாபா அவர்களைப் பார்த்த போது என்ன உங்களுக்கு என் மீதான நம்பிக்கை இவ்வளவுதானா.. என்று கேட்பது போல் இருந்தது.

என் மீது நீங்கள் வைக்கும் பக்தியானது மிகவும் கடுமையான விரதத்தினாலோ… ஓயாமல் சொல்லும் மந்திரத்தினாலோ…என்னைக் காண எப்போதும் வந்து செல்லும் என் ஆலயத்திலோ அல்ல. உங்கள் மனம், உடல், ஆன்மா அனைத்தும் என்னிடமே ஒப்படைக்கும் தருணத்தில் ,நான் உங்களுடன் இருப்பதை உணர்வீர்கள். என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் துயரங்களை இறக்கி வையுங்கள். சுமக்கும் எனக்கு தெரியும் உங்களை அதிலிருந்து மீட்சியளிக்க… உங்களுக்காகத் தான் நான் இருக்கிறேன். உங்களுக்காக மட்டுமே நானிருக்கிறேன்.

சாய்ராம்.. சாய்ராம்…சாய்ராம்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!