ஆப்பிள் போனின் வேகத்தை சீரமைக்க புதிய அப்டேட்: டிம் குக் அறிவிப்பு..!


ஆப்பிள் நிறுவன விவகாரங்கள் சர்ச்சைகளில் முடிவது புதிது கிடையாது என்ற வகையில், ஆப்பிள் சமீபத்திய சர்ச்சைக்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் முடிவு கட்டியிருக்கிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் ஐபோன்களின் வேகம் திட்டமிட்டு ஆப்பிள் நிறுவனம் குறைப்பதாக தகவல் வெளியானது. இதற்கு ஆப்பிள் சார்பில் வெளியிட்ட பதிலில், ஐபோன்களில் வழங்கப்பட்டிருக்கும் உதிரி பாகங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபோன் பேட்டரி தீர்ந்து போகும் போது ஐபோன் வேகம் தானாக குறைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

ஐபோன் வாங்க பல்வேறு தியாகங்கள் மட்டுமின்றி சில-பல ஆயிரங்களை கொட்டிக்கொடுத்த ஐபோன் ப்ரியர்கள், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். உலகின் சில நாடுகளில் ஆப்பிள் ப்ரியர்கள் அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக பதில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஐபோன்களின் வேகம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிம் குக் புதிய அறிவிப்பு அமைந்திருக்கிறது. அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு டிம் குக் வழங்கிய பேட்டியில், ‘ஐபோன்களின் வேகத்தை குறைக்கும் அம்சத்தை வாடிக்கையாளர்கள் விரும்பாத பட்சத்தில், அதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதி புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது.’ என தெரிவித்தார்.


ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் வெளியிட இருக்கும் புதிய ஐ.ஓ.எஸ். அப்டேட்டில் வாடிக்கையாளர்கள் பேட்டரி விவரத்தை விரிவாக பார்த்து ஐபோன் வேகத்தை குறைத்து ஐபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் அம்சத்தை தடுக்க முடியும். இந்த அம்சத்திற்கான மென்பொருள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த மென்பொருள் ஐபோன் பயனர்கள் முக்கிய அழைப்புகளை மேற்கொள்ளும் போதோ அல்லது குறுந்தகவல் அனுப்பும் போதோ பழைய பேட்டரிகளால் ஐபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதை தவிர்க்கவே வழங்கப்பட்டது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

‘ஐபோன்கள் திடீரென ரீஸ்டார்ட் ஆவதை தவிர்க்க ஐபோனின் வேகம் குறைக்கப்படுகிறது. எனினும், வாடிக்கையாளர்கள் விரும்பாத பட்சத்தில் இதனை தடுத்து நிறுத்த முடியும். ஆப்பிள் வாடிக்கையாளர்களின் ஐபோன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஆப்பிள் இந்த வழக்கத்தை ஒருபோதும் ஆதரிக்காது. எங்களது ஒவ்வொரு நடவடிக்கையும் வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாகவே இருக்கும்.’ என டிம் குக் தெரிவித்தார்.

டிம் குக் கருத்துக்களுக்கு ஆப்பிள் செய்தி தொடர்பாளர் சார்பில் எவ்வித பதில் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரம் ஆப்பிள் ப்ரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பேட்டரி மாற்றுவதற்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 50 டாலர்கள் குறைத்து தற்சமயம் 29 டாலர்களுக்கு வழங்குகிறது. இந்தியாவில் இந்த கட்டணம் ரூ.2000 மற்றும் அதற்கான வரி கூடுதலாக செலுத்த வேண்டும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!