புதிய வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி வெளியானது..!


பேஸ்புக் நிறுவனத்தின் எதிர்பார்க்கப்பட்ட வியாபார பயன்பாட்டிற்கான பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் என அழைக்கப்படும் புதிய செயலி வாட்ஸ்அப் வாசிகளிடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. முன்னதாக இந்த செயலி சோதனை செய்யப்படும் ஸ்கிரீன்ஷாட்கள் மட்டும் இணையத்தில் வலம் வந்த நிலையில், புதிய செயலிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கிறது.

வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் வியாபாரம், பணி ரீதியிலான பயன்பாடுகளை பிரித்து கொள்ள முடியும். புதிய செயலி குறித்த விரிவான தகவல்கள் வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் வெளியிடப்பட்டுள்ளது.


வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ் அம்சத்தில் வியாபார நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைத்தளம் மற்றும் வியாபாரம் சார்ந்த கூடுதல் தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.

மெசேஜிங் டூல்ஸ் அம்சம் கொண்டு வியாபாரம் செய்வோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை மிகவேகமாக பதில் அனுப்ப, ஆட்டோ ரிப்ளை அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனளே சேமிக்கப்பட்ட குறுந்தகவல்களை வாட்ஸ்அப் தானாக அனுப்பும்.

மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ் அம்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்களில் எத்தனை பேர் அதனை படித்தனர், எத்தனை பேருக்கு வெற்றிகரமாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.


வழக்கமான வாட்ஸ்அப் செயலியை வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும். தனியாக எந்த செயலியையும் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்களை கட்டுப்படுத்த முழு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்களை பிளாக் செய்யவும் முடியும். மேலும் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்களை ஸ்பேம் என்றும் குறிப்பிட முடியும். வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் முதற்கட்டமாக இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மற்ற நாடுகளிலும் இந்த செயலி வழங்கப்பட இருக்கிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!