ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் உயிரை மாய்த்த கொடூரம்..! என்ன காரணம்..?


விழுப்புரம் அருகே 3 குழந்தைகளைக் கொன்று, கணவன் – மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி பிரச்சினை காரணமா என்பது குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (40). தச்சுத் தொழில் செய்யும் இவர், வளவனூரில் மரக்கடை நடத்திவருகிறார். இன்று (டிச.14) காலை கடை திறக்காததால் கடைப்பணியாளர்கள் வீட்டுக்குச் சென்றனர். வீடு உள்பக்கம் பூட்டி இருந்ததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மோகன் அவர் மனைவி விமலேஸ்வரி (37), தனித்தனியே தூக்கில் தொங்கினர். மேலும், இத்தம்பதியினரின் குழந்தைகளான விமலாஸ்ரீ (10), ராஜஸ்ரீ (3), சிவபாலன் (5) ஆகியோர் ஒரே சேலையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.

இத்தகவல் அறிந்த வளவனூர் போலீஸார், இறந்துகிடந்த 5 பேரின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை செய்து கொண்ட மோகன், கரோனா ஊரடங்கால் வேலை இழந்து சமீபத்தில் கடையைத் திறந்துள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கடன் தவணையைக் கட்ட முடியாததால், தன் குழந்தைகளை ஒரே சேலையில் தூக்கிட்டுக் கொன்றுவிட்டு, அவர் தன் மனைவியுடன் தனித்தனியே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வளவனூர் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன் திண்டிவனம் அருகே தளவாளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், தன் மகள் ஆர்த்தீஸ்வரியைக் கொன்று கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளி சம்பத் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்யவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இரவு விழுப்புரத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி அருண், போலி லாட்டரி டிக்கெட்டால் பாதிக்கப்பட்டு, தன் மனைவி, 3 குழந்தைகளைக் கொன்று, சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.- source: kamadenu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!