தீபாவளி பண்டிகைக்கும் சனிக்கும் யமனுக்கும் என்ன தொடர்பு..!


தீபாவளி கதையின் முக்கிய கதாப்பாத்திரம் நரகாசுரன். ஆனால் தீபாவளி பண்டிகையில் ,வேறு இரண்டு சகோதரர்களுக்கும் கூட தொடர்பு உண்டு. அவர்கள் சனி பகவானும் யம தர்மராஜனும் தான். தீபாவளிக்கும் அவர்களுக்கும் அப்படி எண்ண தொடர்பு?.இவ்விரண்டு சகோதரர்களும் பூலோகவாசிகள் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர்கள்.தீபாவளி அன்று தங்களை மகிழ்விக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வது இவர்களது வழக்கம்.

சனி பகவானுக்குப் பிரியமானது கருப்பு எள். தீபாவளிப் பண்டிகையின் போது,காலையில் கோள்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும்போது, சனிபகவான் தனக்குப் பிடித்தமான எள்ளுக்குப் புத்துயிர் அளிப்பார். அதனால் அன்று அதிகாலையில் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயைப் பூஜித்து மக்கள் தலையிலும் உடலிலும் தேய்த்துக் குளித்தால், சனி பகவானின் ஆசியைப் பெற முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மேலும்,அன்று நல்லெண்ணெயில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் நம்பிக்கை. எனவே,தீபாவளித் திருநாள், சனி பகவானுக்கு மகிழ்ச்சியூட்டும் நாள் என்கிறார்கள்.

இதுபோல யமனுக்கும் தீபாவளித் திருநாள் மகிழ்ச்சி அளிக்கும் நாள் என்று சொலப்படுகிறது.வாட நாட்டில் கொண்டாடப்படும் ஐந்து நாள் தீபாவளிப் பண்டிகையையில், ஒருநாள் “யமதுவிதியை’ ஆகும்.தீபாவளி அமாவாசையை அடுத்து வரும் துவிதியை நாளே “யமதுவிதியை’. இதனை “பையாதுஜ்’ என்றும் சொல்வர்.தீபாவளிப் பண்டிகையின் ஐந்தாம் நாள்தான் யம துவிதியை. இது சகோதர- சகோதரிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்கு பின் இருக்கும் புராண கதையைப் பார்ப்போம்.

யமன், ஐப்பசி மாத துவிதியை அன்று தன் சகோதரியான யமுனையின் வீட்டிற்குச் சென்றார். யமனின் சகோதரியும், தன் சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து மலர்மாலை சூட்டி, நெற்றியில் திலகம் இட்டு அன்புடன் வரவேற்று உபசரித்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து இனிப்பு உண்டு, தங்கள் சகோதரப் பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். தன் சகோதரியிடம் நெற்றியில் திகலமிட்டுக் கொண்ட நாள் யமனுக்குப் பிடித்தமான நாளானது.”இந்த நாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார்களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு யமவாதனை கிடையாது’ என்று வரம் கொடுத்தாராம் யமன் .இதன் அடிப்படையில் தான் வடநாட்டில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் வீட்டிற்குச் சென்று,அண்ணன்- தம்பி ஆகியோருக்கு நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவார்கள். சகோதரப் பாசத்தை வளர்க்கும் விழாவாக இது திகழ்கிறது.

மேலும் மகாளய பட்ச நாட்களில் மறைந்த முன்னோர்கள், தாங்கள் வசித்த ஊருக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், அவர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது நம் வழக்கத்தில் உள்ளது. மேலும்,பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்லாமல்,தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அதனால் வடநாட்டில் திரயோதசி அன்று வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம்.மேலும் அன்று மாலை நேரத்தில் யமதீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். இந்த வெளிச்சம் நம் முன்னோர்களுக்கு அவர்கள் உலகம் செல்வதற்கான பாதையை காட்டும் என்பது நம்பிக்கை. இதனால் முன்னோர்கள் மட்டுமல்ல, யமனும் மகிழ்வானாம்.வீட்டில் யமதீபம் ஏற்றினால் விபத்துகள்,எதிர்பாராத மரணம், துர்மரணம் ஆகியவை ஏற்படாமலும், ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை. – Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!