உங்களைப் பற்றிய கவலைகளை பாபாவிடம் ஒப்படையுங்கள்..!


மனிதர்கள் பலர் மற்றவர்களுக்குப் பல அறிவுரைகளைச் சொல்வார்கள். ஆனால், ஊருக்குத்தான் உபதேசமே தவிர தங்களுக்கு இல்லை என்பதுபோல், தாங்கள் சொல்லும் அறிவுரைகளை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க மாட்டார்கள். ஒருவரை நாம் குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டால், அவருடைய வார்த்தைகளைப் பூரணமாக நம்பவேண்டும்.

அரைகுறை நம்பிக்கை நமக்குச் சங்கடத்தை ஏற்படுத்திவிடும். தன்னுடைய பக்தர்கள் பலருக்கும் சாய் பாபா அவ்வப்போது சில அறிவுரைகளைக் கூறுவார். பாபாவிடம் கொண்டிருக்கும் பக்தியின் காரணமாக அவர்களும் அப்படியே நடந்துகொள்வார்கள். பாபாவின் வார்த்தைகளை மீறும் பக்தர்கள் சங்கடத்தில் மாட்டிக்கொண்டு கஷ்டப்படும்போது, பாபா உடனே அவர்களுடைய கஷ்டத்தைத் தீர்த்து மகிழ்ச்சியைத் தருவார். அப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

பாபாவின் பக்தர் ஒருவர் ஹரிதாஸர். ஊர்தோறும் சென்று காலட்சேபம் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். பாபாவின் பக்தரான நானா சந்தோர்க்கரும் ஹரிதாஸரும் நண்பர்கள்.

ஒருமுறை இருவரும் பாபாவை தரிசிப்பதற்காக ஷீரடிக்கு வந்திருந்தனர். துவாரகாமாயியில் பாபாவை தரிசித்தார்கள். பாபாவும் அவர்களை ஆசீர்வதித்து உதிப் பிரசாதம் கொடுத்தார். மறுநாள் அஹமத் நகரில் ஹரிதாஸருக்கு காலட்சேபம் செய்யவேண்டி இருந்தது. அதேபோல் சந்தோர்க்கருக்கும் அஹமத் நகரில் அலுவலகப் பணி ஒன்று இருந்தது. இருவரும் சேர்ந்தே அஹமத் நகர் செல்ல முடிவு செய்தனர். கோபர்கான் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும். இருவரும் பாபாவிடம் சென்று அனுமதி வேண்டினர்.

பாபா அவர்களிடம், ”சற்றுப் பொறுங்கள். இருவரும் சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம்” என்று கூறினார். பாபாவின் வார்த்தைகளையே வேத வாக்காகப் போற்றும் நானா சந்தோர்க்கர் பாபா கூறியபடியே சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்தார். ஆனால், ஹரிதாஸருக்கு சாப்பிட்டுவிட்டுச் செல்ல மனம் வரவில்லை.

நேரம் ஆகிவிட்டால் ரயிலைத் தவறவிட்டு விடுவோம் என்ற எண்ணத்திலும், அதன் காரணமாக மறுநாள் காலட்சேபத்தின் மூலம் தனக்கு வரவிருக்கும் வருமானத்தை இழந்துவிடுவோமே என்ற அச்சத்திலும் அவர் உடனே புறப்பட நினைத்தார். எனவே, ”மன்னியுங்கள் பாபா. நான் போகும் வழியில் ஒருவரைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டும். உணவைப் பற்றிக் கவலையில்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நானா சந்தோர்க்கர் பொறுமையாக இருந்து சாப்பிட்டுவிட்டு, சற்று நேரம் பாபாவுடன் பேசிவிட்டு ரயில்நிலையத்துக்குப் புறப்பட்டார். அவர் கோபர்கான் ரயில்நிலையத்தை அடைந்தபோது, ஹரிதாஸர் அங்கே இருப்பதைக் கண்டார்.

நானா சந்தோர்க்கரைக் கண்டதும் ஹரிதாஸர், ”இன்று ரயில் மிகவும் தாமதமாக வருகிறது” என்று கூறி சமாளித்தார். அதைக் கேட்ட நானா சந்தோர்க்கர், ”அப்படி ஒன்றும் ரயில் நீண்ட நேரம் தாமதமாக வரவில்லை. சற்று நேரம்தான் தாமதமாக வருகிறது. உங்களுக்கு ரயிலை விட்டுவிடுவோமோ நாளைக்கு வரவிருக்கும் வருமானம் போய்விடுமோ என்று பயம். காலட்சேபத்தின் மூலம் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறீர்கள். ஆனால், அதனால் என்ன பயன்? எப்போதும் குருவிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்.

அதுவும் பாபாவைப் போன்ற மகான்களின் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக்கொள்ளவேண்டும். எத்தனை பெரிய துன்பம் வருவதாக இருந்தாலும், பாபாவின் வார்த்தைகளை மதிக்காமல் இருக்கக்கூடாது. பாபாவிடம் நம்மைப் பற்றிய கவலைகளை ஒப்படைத்துவிட்டால், அவர் பார்த்துக்கொள்வார் என்ற பூரண நம்பிக்கை வேண்டும். காலட்சேபத்தின் மூலம் ஊருக்கு உபதேசம் செய்யும் உங்களுக்கு பாபாவிடம் உறுதியான நம்பிக்கை இருக்கவேண்டாமா?” என்று சற்று கடுமையாகவே கேட்டார்.

ஒருவழியாக ரயில் வந்தது. இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். செல்லும் வழியெங்கும் ஹரிதாஸர் தன் தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தபடி இருந்தார். நானா சந்தோர்க்கர் அவருக்கு பல வகைகளிலும் ஆறுதல் கூறி சமாதானம் செய்தார்.

ஹரிதாஸர் தன் தவற்றை உணர்ந்து பாபாவிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். பாபாவின் அருளால் மறுநாள் அஹமத் நகரில் அவருடைய காலட்சேபம் நல்லபடி நடந்து, அவர் எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானமும் கிடைத்தது.– Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!