ஆன்லைன் படிப்புக்கு போன் வாங்க பசுமாட்டை விற்றவருக்கு நடிகர் சோனுசூட் உதவி


குழந்தைகள் ஆன்லைன் படிப்புக்கு போன் வாங்க பசுமாட்டை விற்றவருக்கு நடிகர் சோனுசூட் உதவி செய்துள்ளார்.

கொரோனா பரவலால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன் லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன் லைனில் பாடங்களை படிக்க கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன் தேவையாக உள்ளது. இதனை வாங்குவதற்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தவிக்கிறார்கள். இமாசல பிரதேசத்தில் கும்மர் என்ற கிராமத்தில் வசிக்கும் குல்தீப் குமார் என்பவர் தனது குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் படிக்க ஸ்மார்ட் போன் வாங்க முயற்சி செய்தார். அதற்கு ரூ.6 ஆயிரம் தேவைப்பட்டது. அவரால் அதை திரட்ட முடியவில்லை. வங்கிகள் மற்றும் தெரிந்தவர்கள் என்று அலைந்து கடன் கேட்டும் யாரும் உதவவில்லை.

இதையடுத்து பால் கறந்து தனது பிழைப்புக்காக வைத்திருந்த பசுமாட்டை விற்று குழந்தைகள் படிப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்தார். இது பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியானதை பார்த்த நடிகர் சோனுசூட் அவருக்கு உதவவும் பசுமாட்டை மீட்டு கொடுக்கவும் முன்வந்தார். இதையடுத்து அவருக்கு முகவரி உள்ளிட்ட தகவல்கள் அனுப்பப்பட்டன. அந்த ஏழைகுடும்பத்துக்கு சோனு சூட் உதவி செய்துள்ளார். சோனு சூட் தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அருந்ததி உள்ளிட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!