மருந்து கடையில் சண்டையிட்ட வாலிபரை தரதரவென இழுத்துச்சென்ற போலீசார்..!


மருந்து கடைக்கு வந்தபோது வாகனத்தை பறிமுதல் செய்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தரதரவென இழுத்துச்சென்று ஜீப்பில் ஏற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் சென்னையில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம். அதுவும் இருசக்கர வாகனங்களில் செல்லாமல் நடந்து செல்லவும் சென்னை மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மீறி செல்பவர்களின் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்ற வாலிபர், அந்த பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்க தனது மொபட்டில் சென்றார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், தடையை மீறி வந்ததாக சதாம் உசேனின் மொபட்டை பறிமுதல் செய்தனர். மருந்து வாங்குவதற்காக கடைக்கு வந்ததாக கூறியும் போலீசார் கேட்கவில்லை எனத்தெரிகிறது.

சதாம் உசேன், தனது உறவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து பறிமுதல் செய்த மொபட்டை திரும்ப தரும்படிகேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் இருவரும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடமுயன்றனர்.

உடனே அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார், சதாம் உசேனை போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றனர். அவர் வர மறுத்ததால் தரதரவென இழுத்துச்சென்று, குண்டுகட்டாக தூக்கி போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள். அவர் ஜீப்பின் உள்ளே அமர மறுத்ததால் அவரது தலையை அமுக்கி வலுக்கட்டாயமாக ஏற்றினர். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், போலீசாரின் இந்த செயலை கண்டித்து அவர்களிடம் தட்டிக்கேட்டனர்.

இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு அது வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே சாத்தான்குளத்தில் தடையை மீறி செல்போன் கடையை திறந்ததாக கைதான வியாபாரிகளான தந்தை-மகன் போலீசார் தாக்கியதால் இறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் போலீசாருக்கு எதிராக அரசியல் கட்சிகள், திரை நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில்தான் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போலீஸ் நிலையத்துக்கு கைது செய்து அழைத்து வருபவர்களின் மனது புண்படும்படி பேசக்கூடாது, அதையும் மீறி அவர்களை அடிப்பதும் சட்டப்படி தவறு என நேற்று முன்தினம் மாநகர போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் அதற்கு மறுநாளே சென்னையில் இதுபோன்ற சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்ட சதாம் உசேனிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு, கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!