தொழு நோயாளிகளிடம் பரிவு காட்டிய சீரடி சாய்பாபா..!


பழுத்த, கனிகள் நிறைந்த மரத்தை நாடித் தான் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். சாய்பாபாவை நோக்கி சகலவிதமான மனிதர்களும், தங்கள் சங்கடங்களை தீர்க்க தேடி – நாடி வந்தனர். அரசு உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், ஊர் தலைவர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், பெண்கள், ஏழை-எளியவர்கள், ஆதரவற்றவர்கள், அரசியல்வாதிகள், சிறுவர், சிறுமியர்கள் என்று சாய்பாபாவை காண தினமும் பக்தர்கள் திரண்டனர். அந்த கூட்டத்துக்கு மத்தியில் சாய்பாபாவின் கருணைப் பார்வை தங்கள் மீதும் ஒரு வினாடியாவது பட்டு விடாதா என்ற ஏக்கத்தோடு நோயாளிகளும் அலை, அலையாக வந்தனர். பாபா வீற்றிருக்கும் துவாரகமாயி மசூதிக்குள் ஒரு தடவை ஏறி இறங்கி விட்டால் தங்கள் நோய் துன்பம் பறந்தோடி விடும் என்று முழுமையாக நம்பினார்கள். அவர்களது இந்த நம்பிக்கை வீண் போனதே இல்லை. ஏனெனில் மற்றவர்களை விட நோயாளிகளிடம் பாபா இரட்டிப்பு மடங்கு கருணைக் காட்டினார். நோயாளிகளை தொட்டு ஆசீர்வதிக்க அவர் ஒரு போதும் தயங்கியதே இல்லை.


அதுவும் தொழு நோயாளிகளை அவர் மிகுந்த இரக்கத்துடன் நடத்தினார். தொழு நோயாளிகளைக் கண்டால், அவர்களது வாழ்வுக்கு ஏதாவது ஒரு வகையில் வழிகாட்டி விடுவார். அந்த காலக்கட்டத்தில் அதாவது சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தொழு நோய் பாதிப்பின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. தற்போது இருப்பது போன்ற நவீன மருத்துவ வசதி எதுவுமே இல்லாத காரணத்தால் தொழு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதனால் சாய்பாபாவிடம் சரண் அடையும் வகையில் தினமும் ஒரு தொழு நோயாளியாவது வந்து விடுவார். அவர்களை கட்டிப்பிடித்து ஆசி வழங்கும் பாபா, அவர்கள் மனம் குளிரும் வகையில் உதவிகள் செய்வார். ஒரு தடவை தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு வயதான பெண் பாபாவை பார்க்க வந்திருந்தார். அவளுக்கு உதி கொடுத்து ஆசீர்வதித்த பாபா… சுற்றும் முற்றும் பார்த்தார்.

அப்போது சீரடியைச் சேர்ந்த பீமாபாய் என்ற பக்தர் நின்று கொண்டிருந்தார். அவரை தம் அருகில் வரும்படி பாபா அழைத்தார். பீமாபாய் வந்ததும், “இவளை உன் வீட்டுக்கு அழைத்துச் செல். நன்றாக உணவு கொடுத்து கவனித்துக் கொள்” என்று பாபா கூறினார். அந்த பெண்ணின் உடல் முழுக்க இருந்த புண்களைப் பார்த்ததும் பீமாபாய் முகம் சுழித்தார். பிறகு அவர், “பாபா…. இவள் குஷ்டரோகி…-” என்றார். அதற்கு பாபா, “ஆமாம், பீமாபாய்… அதனால்தான் இவளை உன் வீட்டுக்கு அழைத்துச் செல் என்கிறேன்” என்றார். இதையடுத்து பீமாபாய் அந்த பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு கொடுத்து பராமரித்தார். ஒரு மாதம் கடந்த போது அந்த பெண் நோய் முற்றி மரணம் அடைந்தாள்.

மற்றொரு தடவை பாலாஜி பட்டீல் என்ற பக்தர் பாபாவை தரிசனம் செய்ய சீரடி சென்றிருந்தார். அன்று பிற்பகல் அவர் பாபாவிடம் சென்று, “இன்றிரவு நான் என் ஊருக்கு புறப்பட்டுச் செல்லட்டுமா?” என்று அனுமதி கேட்டார். அவருக்கு பாபா அனுமதி கொடுக்கவில்லை. “சீரடியில் உனக்கு ஒரு வேலை காத்து இருக்கிறது. நாளை காலை வா, அது என்ன வேலை என்று சொல்கிறேன்” என்றார். அதன்படி இரவு சீரடியில் தங்கிய பாலாஜி பட்டீல் மறுநாள் காலை எழுந்து பாபாவை சென்று பார்த்தார். அப்போது மசூதிக்குள் பாபா அருகில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு தொழு நோயாளி இருந்தார். பாலாஜி பட்டீலை கண்டதும் புன்னகை பூத்த பாபா, “வா… பாலாஜி… இந்த பெரியவரை இனி நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக சீரடியில் நீ ஒரு மாதம் தங்கி இருக்க வேண்டும்” என்றார்.


பாபாவின் இந்த உத்தரவுக்கு பாலாஜி பட்டீல் மறுபேச்சு பேசவில்லை. அந்த முஸ்லிம் பெரியவரை தன்னுடன் அழைத்துச் சென்று, தொழு நோய்க்கு மருந்து போட்டு பராமரித்தார். நல்ல சத்தான உணவுகளை வாங்கிக் கொடுத்தார். ஆனால் பாபா சொன்னபடி ஒரே மாதம் தான்….. ஒரு மாதத்தில் அந்த முஸ்லிம் பெரியவர் மரணம் அடைந்தார். அதன்பிறகு பாலாஜியை வீட்டுக்கு புறப்பட்டுச் செல்லுமாறு பாபா உத்தரவிட்டு அனுமதி கொடுத்தார். பாபா ஒரு முறை துவாரகமாயி மசூதியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். பாபா அருகில் தாராபாய், சதாசிவ தார்க்கட் உள்பட சில பெண்களும், பக்தர்களும் அமர்ந்திருந்தனர். அந்த சமயத்தில் துவாரகமாயி மசூதி படிக்கட்டுகளில் ஒரு தொழு நோயாளி தட்டுத்தடுமாறி ஏறி வந்து கொண்டிருந்தான். மெலிந்து காணப்பட்ட அவன் கந்தல் உடைகளை அணிந்திருந்தான்.

அவன் உடம்பு முழுக்க தொழு நோய் புண்கள் பரவி இருந்தது. அதில் இருந்து வடிந்த சீழ் துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. அவன் அருகில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு நாற்றம் வீசியது. இதனால் அவன் கூனி குறுகியபடிதான் மசூதிக்குள் ஏறி கொண்டிருந்தான். அவன் மனதுக்குள் பாபா மீது மிகுந்த பாசமும், பற்றும் வைத்திருந்தான். எல்லாரும் பாபாவுக்கு மாலை அணிவிப்பதையும், சாப்பிட எதையாவது கொடுப்பதையும் கண்ட அவனுக்குள், தாமும் பாபாவுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் வசதி இல்லாத காரணத்தால் அவனால் பாபாவுக்காக ஒரே ஒரு பீடா வைத்தான் வாங்க முடிந்தது. அந்த பீடாவை கந்தலான, துவைக்காத தன் வேட்டியின் ஒரு பகுதியில் பொதிந்து வைத்திருந்தான். பாபாவிடம் பீடாவை கொடுத்து ஆசீர்வாதம் பெற்ற பிறகு, அந்த பீடாவில் ஒரு சிறு பகுதியை கேட்டு வாங்கி சாப்பிட வேண்டும் என்று அவன் மனதுக்குள் நினைத்திருந்தான்.

தட்டுத்தடுமாறி ஏறி மசூதிக்குள் வந்து விட்ட அவனைக் கண்டதும் தார்கட் முகம் சுழித்தார். நாற்றம் தாங்க முடியவில்லையே என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். மற்ற பக்தர்களும் அந்த குஷ்டரோகி மீது தங்கள் உடல் பட்டு விடக்கூடாது என்று ஒதுங்கினார்கள். ஆனால் அந்த தொழு நோயாளி நிலையை கண்டதும் பாபாவின் முகம் ஆயிரம் சூரியன்கள் உதித்தது போல பிரகாசம் ஆனது. சிரித்துக் கொண்டே பாசத்தோடு வரவேற்றார். பாபாவின் காலடியில் அவன் தலையை வைத்துப் பணிந்தான். பாபா அவனுக்கு உதி கொடுத்தார். அவன் கை, கால்களில் இருந்த புண்கள் மீது உதியை தூவி ஆசீர்வதித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த தொழு நோயாளி பாபாவை கரம் கூப்பி வணங்கினான். பிறகு மற்றவர்கள் ஏதாவது சொல்வார்களோ என்ற பயத்தில், பாபாவுக்காக வாங்கி இருந்த பீடாவை கொடுக்காமலே திரும்பிச் சென்றான்.

அப்போது தார்கட்டும், தாராபாயும் “அப்பாடா… குஷ்டரோகி போய் விட்டான்” என்று மனதுக்குள் நினைத்தனர். அடுத்த வினாடி அவர்களை பாபா ஏறிட்டுப் பார்த்தார். பிறகு தன் அருகில் நின்ற ஒருவரிடம், “இங்கு வந்து சென்ற தொழு நோயாளியை அழைத்து வா. அவர் எனக்குத் தர வேண்டிய பீடாவை தராமல் செல்கிறார்” என்றார். பாபா உத்தரவுப்படி அந்த தொழு நோயாளி மீண்டும் மசூதிக்குள் அழைத்து வரப்பட்டான். அவனிடம் பாபா, “எனக்கு வாங்கி வந்ததைக் கொடு” என்றார். உள்ளம் பூரித்துப் போக, உற்சாகமான அந்த தொழு நோயாளி தன் வேட்டியில் பொதிந்து வைத்திருந்த பீடாவை எடுத்து பாபாவிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட பாபா, அந்த பீடாவில் கொஞ்சம் எடுத்து தார்கட்டிடம் கொடுத்து, “சாப்பிடுங்கள்” என்றார். தார்கட் வேறு வழி தெரியாமல் அந்த பீடாவை வாங்கி சாப்பிட்டார். பிறகு பாபாவும் அந்த பீடாவில் கொஞ்சம் சாப்பிட்டார். பீடாவில் கொஞ்சம் மீதம் இருந்தது. அதை தொழு நோயாளியிடம் திருப்பிக் கொடுத்த பாபா, “இதை நீ பிரசாதமாக வைத்துக் கொள். இதற்கு தானே நீ ஆசைப்பட்டாய்” என்றார் சிரித்தபடி.

அந்த தொழு நோயாளி உள்பட மசூதியில் இருந்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். சாய்பாபா 1910-ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த துனி நெருப்புக்குள் திடீரென கை விட்ட சம்பவம் நடந்தது. பிறகுதான் எங்கோ ஒரு ஊரில் கொல்லனின் மகன் தீக்குள் விழுந்ததை பாபா கையை நுழைத்து தூக்கி காப்பாற்றிய விஷயம் நடந்திருப்பது தெரிந்தது. இதனால் பாபாவின் கையில் ஒரு பகுதி கருகி வெந்து போனது. இதை கேள்விப்பட்ட பாபாவின் பக்தர்களில் ஒருவரான நானா, பம்பாயைச் சேர்ந்த புகழ் பெற்ற டாக்டரான பரமானந்த் என்பவரை அழைத்து வந்தார். பாண்டேஜ் துணி, ஆயிண்ட்மென்ட் உள்பட மருந்துகளை எடுத்துக் கொண்டு டாக்டர் பரமானந்த் பம்பாயில் இருந்து சீரடிக்கு வந்திருந்தார். ஆனால் பாபா அவரை தனக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை. மசூதியில் இருந்த மற்றவர்கள் சிகிச்சை அளிக்க முன் வந்தபோதும், அவையும் பாபாவால் மறுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவரான பாகோஜி ஷிண்டே என்பவர் சில பச்சிலைகளையும் நெய்யையும் எடுத்து வந்து கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். பாகோஜி ஷிண்டே தொழு நோயாளி ஆவார். எனவே அவரது சிகிச்சையையும் பாபா ஏற்க மாட்டார் என்றே மற்ற அனைவரும் நினைத்தனர்.
ஆனால் பாகோஜியைப் பார்த்ததும் முகம் மலர்ந்த பாபா, அவரை தனக்கு சிகிச்சை அளிக்க அனுமதித்தார். பாபாவின் வெந்து போன கையில் நெய் போட்டு நன்றாக தேய்த்து விட்டு, பச்சிலையை அதன் மீது பாகோஜி கட்டினார். தினமும் பழைய கட்டைப் பிரித்து விட்டு பாபாவுக்கு புதிய மருந்து கட்டு போடப்பட்டது. தினமும் அந்த பணியை குஷ்டரோகி பாகோஜியே செய்தார். சில நாட்களிலேயே பாபாவின் கை குணம் அடைந்தது. அதன்பிறகும் பாபா தினமும் கையில் கட்டுப் போட்டுக் கொண்டார். அவரைத் தொட்டு, கட்டுப் போடும் பணியை பாகோஜிதான் செய்தார். பாபா மசாசமாதி அடையும் வரை அதாவது 1910-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை சுமார் 8 ஆண்டுகள் பாகோஜி தினமும் இந்த மருத்துவ சேவையை செய்தது குறிப்பிடத்தக்கது.

குஷ்டரோகியான பாகோஜி மீது கொண்ட அன்பினால் தான் அவர் தினமும் தன்னைத் தொட பாபா அனுமதித்தார் என்பது பிறகுதான் தெரிந்தது. இந்த சேவை மட்டுமின்றி, தினமும் மசூதியில் இருந்து லெண்டித் தோட்டத்துக்குப் போகும் போது தனக்கு குடை பிடித்து வரும் பணியையும் பாகோஜிக்கு பாபா வழங்கியிருந்தார். பாகோஜியின் உடலில் இருந்து தொழு நோய் புண்கள் அதிகமாகி, சீழ் வடிந்து, துர்நாற்றம் வீசிய போதும் அவர்தான் தனக்கு குடை பிடித்து வர வேண்டும் என்பதில் பாபா உறுதியாக இருந்தார். பாபா குடையுடன் இருக்கும் புகைப் படங்களைப் பார்த்தால் பாபா அருகில் பாகோஜி இருப்பதை காணலாம். இதனால் தொழுநோயாளிகளிடம் பாபா காட்டிய பேரன்பு உலகம் முழுவதும் பேசப்பட்டது. மசூதியில் எத்தனையோ பேர் பாபாவுக்காக பணி செய்ய காத்து கிடந்தபோது, குஷ்ட ரோகியான பாகோஜி தான் அவருக்கு பெரும்பாலான வேலைகளை செய்தார். அவரே பாபாவின் முதன்மை சேவகராகத் திகழ்ந்தார். நோயாளிகளிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற தன் அறிவுரையை, தன்னைப் பார்த்து, ஒவ்வொருவரும் பின்பற்ற பாகோஜி மூலம் பாபா வழி வகுத்தார்.- Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!