பாபாவை முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும்..!


கேப்டன் ஹத்தே என்பவர் குவாலியர் நகரத்தில் பிரபல மருத்துவராக இருந்தவர். ஷீர்டி பாபாவின் பக்தர். அவருடைய நண்பர் சாவ்லராம் என்பவர். ஒருமுறை அவருடைய 22 வயது மகன் காணாமல் போயிவிட்டான். பல இடங்களில் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றவே முடியவில்லை.

இந்த நிலையில், நண்பர் ஹத்தேவிடம் சென்று ஆலோசனை கேட்கலாமே என்று எண்ணி, குவாலியருக்கு வந்தார். தன் மகன் காணாமல் போனது பற்றி அவரிடம் கண்ணீர் மல்கக் கூறினார்.

நண்பர் கூறியதைக் கேட்ட ஹத்தே, அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியாமல் தவித்தார். ஆனாலும், தான் பெரிதும் போற்றி வணங்கும் பாபா, நண்பரின் துன்பம் தீரவும் ஒரு வழி காட்டுவார் என்பதில் உறுதியான நம்பிக்கை மட்டும் அவருக்கு இருந்தது.

“கஷ்டப்படாதே. உன் மகன் நன்றாக இருக்கிறான் என்றே நினைக்கிறேன். அவனுக்கு ஒன்றும் ஆகாது. பாபாவை முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொள். எப்படியும் உன் மகன் விரைவில் திரும்பி வருவான்” என்று கூறினார்.

நண்பரின் வார்த்தைகளால் சற்றே ஆறுதல் பெற்ற சாவ்லராம், “என் பிள்ளை கிடைக்கட்டும். உடனே அவனையும் அழைத்துக்கொண்டு ஷீர்டிக்குச் செல்கிறேன்” என்றார். அதைக் கேட்ட ஹத்தே, “பிள்ளை கிடைத்தால்தான் பாபாவை தரிசிக்கச் செல்வதாகக் கூறுவது தவறு. அது பாபாவிடம் அவநம்பிக்கை கொண்டது போல் ஆகும்” என்று சற்று கடுமையாகவே கூறினார்.

அப்படிக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொண்ட சாவ்லராம், நண்பரிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.

சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. காணாமல் போன அவருடைய மகனிடமிருந்துதான் அந்தக் கடிதம் வந்திருந்தது. அதில், தான் மெசபடோமியா சென்று ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், குறிப்பிட்ட நாளில் ஊருக்குத் திரும்பி வரப்போவதாகவும் எழுதியிருந்தார். சாவ்லராமும் அவருடைய மனைவியும் ஹத்தேவைச் சந்தித்து நன்றி கூறினர்.

ஹத்தே அவர்களிடம் உடனே ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்து வரும்படிக் கூறினார். ஆனால், அவர்களோ தங்கள் மகனை வரவேற்பதற்காக பம்பாய்க்குச் சென்றனர். மகிழ்ச்சியுடன் சென்ற அவர்களுக்கு, மகனைப் பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. உடல் ஆரோக்கியம் குன்றி, மிகவும் மெலிந்து போயிருந்தான் அவன். ஊருக்கு வந்ததுமே முதல் வேலையாகத் தன் மகனை டாக்டர் ஹத்தேவிடம் அழைத்துச் சென்றார் சாவ்லராம்.

நண்பரின் மகனைப் பரிசோதித்துப் பார்த்து சிகிச்சை செய்த ஹத்தே, “உடனே உங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஷீர்டிக்குச் செல்லுங்கள். பாபாவை தரிசித்த உடனே அவனுடைய நோய் குணமாகும்” என்று கூறினார்.

நண்பர் சொல்லியபடியே உடனே ஷீர்டிக்குச் செல்லத் தயாரானார். பாபாவை தரிசிப்பதற்கு சிபாரிசுக் கடிதம் தரும்படிக் கேட்டார்.

“பாபாவை தரிசிக்க சிபாரிசுக் கடிதமெல்லாம் தேவையில்லை. நீ தாராளமாக யாருடைய சிபாரிசும் இல்லாமல் பாபாவை தரிசிக்கலாம். நீ பாபாவை தரிசிக்கும்போது, நான் கொடுத்ததாகச் சொல்லி இந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவரிடம் கொடு” என்று கூறி, ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது, `இந்த நாணயத்தை பாபா தனக்கே திருப்பிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே’ என்று நினைத்தார். அப்படிக் கிடைத்தால் அதையே குரு பிரசாதமாக நினைத்து பூஜையில் வைக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு. ஆனாலும், தன்னுடைய விருப்பத்தை நண்பரிடம் அவர் தெரிவிக்கவில்லை.

ஷீர்டிக்குச் சென்ற சாவ்லராம், குடும்பத்தினருடன் பாபாவை நமஸ்கரித்தார்.

அவரைப் பார்த்து புன்னகைத்த பாபா, “உன் பிள்ளையைக் காணாமல் துன்பப்பட்டாய். உன் நண்பன் ஹத்தே என்னைப் பார்க்கும்படிச் சொன்னார். ஆனால், நீயோ மகன் கிடைத்த பிறகு என்னைப் பார்க்க வருவதாகக் கூறினாய். என்ன நான் சொல்வது சரிதானே?” என்று கேட்டவர், தொடர்ந்து, “என்னைச் சரணடைந்தவர்களை நான் எப்போதும் கைவிடமாட்டேன். குருவைப் பூரணமாக நம்பு. அப்படி நம்பிக்கையுடன் இருந்தால், எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து சாதிப்பாய்” என்று கூறினார். அவருடைய மகனை அருகில் அழைத்து, தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்.

பிறகு சாவ்லாவைப் பார்த்து, “எனக்கு உன் நண்பர் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடு” என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.

பாபாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்று ஒரு கணம் திகைத்து நின்ற சாவ்லராம், பிறகு தன்னை சமாளித்துக்கொண்டு, நண்பர் கொடுத்த நாணயத்தை பாபாவிடம் கொடுத்தார்.

நாணயத்தை வாங்கிக்கொண்ட பாபா, சற்று நேரம் அதை உற்றுப் பார்த்துவிட்டு, பிறகு அந்த நாணயத்தை உதியுடன் சேர்த்துக் கொடுத்து ஹத்தேவிடம் கொடுக்கும்படிக் கூறினார்.

பாபாவை தரிசித்த உடனே தன்னுடைய உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறிய மகனை மகிழ்ச்சியுடன் பார்த்த பெற்றோர் பாபாவுக்கு மனப்பூர்வமான நன்றிகளைச் சமர்ப்பித்தனர். மனம் முழுவதும் பாபாவின் அருள்திறமே நிறைந்திருக்க குவாலியர் வந்து சேர்ந்தனர். நேராக டாக்டர் ஹத்தேவைப் பார்க்கச் சென்ற சாவ்லராம், பாபா தன்னிடம் கொடுத்தனுப்பிய உதிப் பொட்டலத்தை ஹத்தேவிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி! அவர் விரும்பியபடியே உதிப் பொட்டலத்துக்குள் அவர் காணிக்கையாகக் கொடுத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் இருந்தது! அந்த நாணயத்தை பூஜையறையில் இருந்த பாபாவின் படத்துக்கு முன்பு வைத்து கண்ணீர் மல்க நன்றி கூறினார் ஹத்தே. – Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!