6 மல்யுத்த வீராங்கனைகள் ‘கொரோனா’ பீதியால் விலகல்.. உக்ரைனில் பயிற்சி முகாமில் சோகம்..!


உக்ரைனில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க இருந்த இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 6 பேர் கொரோனா அச்சத்தால் விலகி உள்ளனர்.

உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும்பீதியை ஏற்படுத்தி உள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசுக்கு இதுவரை 3,100 பேர் வரை பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் ஜூன், ஜூலை மாதம் நடைபெற உள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக பல விளையாட்டுப்போட்டிகள் ரத்தாகி இருந்தது.

இந்த நிலையில் உக்ரைனில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க இருந்த இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 6 பேர் கொரோனா அச்சத்தால் விலகி உள்ளனர். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஹரிஷ் போகட் (53 கிலோ) வினிஷ் நிர்மலா (50 கிலோ), அன்சு மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), திவ்யா (68 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோர் விலகி உள்ளனர். அவர்கள் லக்னோவில் பயிற்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மலேசியாவில் நடைபெற இருந்த அஸ்வின் ஷா சர்வதேச ஆக்கி போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற இருந்த இந்தப்போட்டி செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதேபோல கத்தார் மற்றும் தாய்லாந்தில் நடைபெற இருந்த மோட்டார் கிராண்ட் பிரீபந்தயமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!