ஆபாசமாக கல்லூரி மாணவிகளின் படங்களை சித்தரித்து டிக்-டாக் வீடியோ – வாலிபர் அதிரடி கைது..!


சுரண்டை அருகே கல்லூரி மாணவிகள் படங்களை ஆபாசமாக சித்தரித்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கண்ணன் (வயது 19). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் காதல் மன்னன் என்ற பெயரில் டிக்-டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதுவரை சுமார் 1,000 வீடியோக்கள் வரை பதிவேற்றம் செய்துள்ளார். இவரை 4.18 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இதனால் இவர் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு அதிக எண்ணிக்கையிலான லைக்குகள் கிடைத்துவந்தது. இதில் உற்சாகம் அடைந்த கண்ணன் ஏராளமான வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டுவந்தார். இந்நிலையில், தான் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் என்றும், வசதியான வீட்டுப்பையன் என்றும் டிப்-டாப் உடையணிந்து பல மாணவிகளிடம் பழகி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவிகளிடம் செல்பி போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். மேலும் சில திருமணமான பெண்களின் போட்டோக்களை மார்பிங் செய்தும் தனது டிக்-டாக்கில் வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மார்பிங் போட்டோக்களை வைத்து சில பெண்களை மிரட்டியதாகவும் தெரிகிறது.

இவரது மிரட்டல்களுக்கு பயந்து சில பெண்கள் தான் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை கொடுத்துள்ளனர். எனினும் சில பெண்களிடம் தொடர்ந்து அவர் மிரட்டி வந்ததால் இதுகுறித்து அவர்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்கிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. சக்திவேல் உத்தரவின்பேரில் சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஸ்மார்ட் போன்கள், மெமரி கார்ட், பென்டிரைவ் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட கண்ணன் மீது மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!