சமூகவலைதளத்தில் கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கருடன் கலக்கும் இத்தாலி பாட்டி..!


தொழில்நுட்ப உலகில் கண்டறியப்படும் புதுப்புது சாதனங்களும், மக்களுக்கு பயன்படுவது மட்டுமின்றி, வாழ்க்கையை எளிமையாக்கும் ஒற்றை நோக்கத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படுகின்றன.

அதிநவீன தொழில்நுட்ப யுகத்தில் நம் வாழ்க்கை முறையில் பல்வேறு சாதனங்களும் நம்முடன் ஐக்கியமாகி, நம்முள் உறவாடுகின்றன. இவ்வாறு நம்முடன் உரையாடும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் தொழில்நுட்பம் துவக்கத்தில் வியப்பை ஏற்படுத்தி, தற்சமயம் நாம் அறியாத விவரங்களை மெல்லிய குரலில் அசத்தலாக தெரிவிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் ஹோம் ஸ்பீக்கர்களை பல்வேறு நிறுவனங்களும் தயாரித்து வெளியிட்டு வரும் நிலையில், இந்த சாதனங்கள் நம்முள் பிரபலமாகவும், பழகிப்போன உறவுமுறை போன்று முழுமையாக மாறிவிட்டது.


தொழில்நுட்ப பிரியர்களுக்கு இதுபோன்ற சாதனங்கள் பழகிப்போயிருந்தாலும் நம் வீடுகளில் உள்ள முதியோருக்கு இவை புதிர் போடும், ஆச்சரிய பொருளாகவே இருக்கிறது. இவ்வாறு இத்தாலியை சேர்ந்த மூதாட்டி கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கருடன் உரையாடும் வீடியோ யூடியூபில் டிரென்ட் ஆகியுள்ளது.

85 வயதான மூதாட்டி சிறிய கிண்ணம் போன்று காட்சியளிக்கும் கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரிடம் கேள்விகள் கேட்கிறார். அதற்கு ஸ்பீக்கர் வழங்கும் பதில்களை கேட்டு மூதாட்டி பயம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கருடன் மூதாட்டி உரையாடும் வீடியோவினை பென் ஆக்டிக்ஸ் என்பவர் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

ஹே கூகுள், ஓ.கே. கூகுள் போன்ற வார்த்தைகளை மூதாட்டி உச்சரிக்கும் விதம் மற்றும் மூதாட்டியின் கேள்விக்கு கூகுள் வழங்கும் பதில்களை கேட்டு அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி இணையவாசிகளை அதிகம் கவர்ந்துள்ளது. யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட குறைந்த காலக்கட்டத்திலே இந்த வீடியோவினை அதிகம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!