இன்ஸ்டாகிராமில் மாணவிகளிடம் ஆசையாக பேசி ஆபாசபடம்… என்ஜினீயர் சிக்கியது எப்படி..?


இன்ஸ்டாகிராமில் பழகி லட்சக்கணக்கில் பணம் பறிப்பு மற்றும் மாணவிகளின் ஆபாச படம் எடுத்து மிரட்டிய என்ஜினீயரை பெண் போலீசார் பொறி வைத்து பிடித்த சம்பவத்திற்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 12 வயது உள்ள 8-ம் வகுப்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

காதல் ஆசை வார்தை கூறிய அவர் மாணவியை ஆடையில்லாமல் உள்ள போட்டோக்களை அனுப்பும் படி கேட்டார். இதற்கு மாணவியும் சம்மதித்து ஆபாசமான பல போட்டோக்களை அந்த வாலிபருக்கு செல்போன் மூலம் அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் வாலிபரின் சுயரூபம் தெரிந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்தார்.

இதற்கிடையே மாணவியின் தாயின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் உங்கள் மகளின் ஆபாச படங்கள் என்னிடம் உள்ளது. அதனை கொடுக்க ரூ.2 லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார்.

மேலும் பணத்தை கொடுக்கவில்லை எனில் மாணவியின் ஆபாச படங்களை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக தெரிவித்தார்.

இதனால் பயந்து போன சிறுமியும் அவரது தாயும் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் மிரட்டல் விடுக்கும் நபரை பொறி வைத்து பிடிக்க பெண் போலீசார் கவுதா, சங்கீதா, அனுராதா, மஞ்சு, பாணுப்பிரியா, ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அவரிடம், மாணவியின் உறவினர் போல் பேச்சு கொடுத்தனர்.

இதனை நம்பிய அந்த வாலிபர் பணத்துடன் பேசன்பிரிட்ஜ் அருகே வருமாறு தெரிவித்தார். பெண் போலீசார் மாறு வேடத்தில் அங்கு தயாராக இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மிரட்டல் வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர், திருமுல்லைவாயிலை சேர்ந்த பி.டெக். என்ஜினீயரிங் பட்டதாரியான சாய் என்கிற ராஜேஷ் சிவசுந்தரம் என்பது தெரிந்தது.

அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்திய செல்போன், லேப்-டாப்பை ஆய்வு செய்தபோது மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களின் ஆபாச படங்கள் இருந்தன.

இன்ஸ்டாகிராமில் முதலில் பெண்களுடன் பழகும் சாய் அவர்களுக்கு காதல் வலை வீசி ஆபாச படங்களை அனுப்ப சொல்லி ரசிப்பார். பின்னர் வேறொரு நபர் பேசுவது போல் பெண்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

அதிக அளவு பணம் கேட்டால் போலீசுக்கு சென்று விடுவார்கள் என்பதால் ரூ. 2 லட்சம் வரை பணம் பறித்து இருக்கிறார். அவர் இதுவரை லட்சக்கணக்கில் பணம் பறித்து இருப்பது தெரியவந்தது.

கைதான சாயின் செல்போன் மற்றும் லேப்-டாப்பில் இருந்த மாணவிகள், இளம்பெண்களின் ஆபாச படங்களை போலீசார் முழுவதுமாக அழித்தனர்.

பெற்றோர் தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் செல்போன்களை ஆய்வு செய்து அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுரை கூற வேண்டும். அப்படியானால்தான் சாய் போன்ற நபர்களின் ஆசை வார்த்தைக்கு சிக்காமல் தப்பிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

சாயை பொறி வைத்து பிடித்த பெண் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!