52 என்ற எண் நினைவிருந்தால் 290 ம் நினைவிருக்கனும் – ஈரான் அதிபர் எச்சரிக்கை..!


52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் எனக்கூறிய அமெரிக்காவிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரித்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழிவாங்குவோம் என ஈரான் நாட்டின் புதிய ராணுவ தளபதி கூறினார்.

இதையடுத்து, ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், ஒருபோதும் ஈரான் நாட்டிற்கு மிரட்டல்கள் விடுக்க வேண்டாம் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எச்சரித்துள்ளார்.

‘52 என்ற எண்ணை குறிப்பிடுபவர்களுக்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும். ஒருபோதும் ஈரான் நாட்டிற்கு மிரட்டல் விடுக்க வேண்டாம். #ஐஆர் 655’ என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1979 ம் ஆண்டு ஈரான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் (அமெரிக்க குடிமக்கள்) 52 பேர் ஈரானியர்களால் ஓராண்டுக்கும் மேலாக பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். அதை குறிப்பிட்டே 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் தெரிவித்ததாக கூறப்பட்டது.

அதேபோல் 1988ம் ஆண்டு ஜூலை மாதம் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய விமானம் (ஈரான் ஏர் 655) அமெரிக்க போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் கொல்லப்பட்டனர். இதை குறித்தே தற்போது 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஹசன் ரவுகானி கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!