வயர்மேன் பணிக்கு 2 குழந்தைகளின் தாய் தேர்வு..!


தஞ்சையில் நடந்த உடல்தகுதி போட்டியில் வெற்றி பெற்று வயர்மேன் பணிக்கு 2 குழந்தைகளின் தாய் தேர்வு செய்யப்பட்டார். கணவரால் முடியாததை மனைவி சாதித்துக்காட்டி உள்ளார்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணைமின் நிலைய வளாகத்தில் வயர்மேன்(கேங்மேன்) பணிக்கான உடல்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வுகள் கடந்த 2-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது தொடர் மழைபெய்ததால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி இந்த தேர்வு கடந்த 9-ந்தேதி தொடங்கி இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இதில் மொத்தம் 1,790 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான வயது வரம்பு ஆண், பெண்களுக்கு 40 ஆகும்.

திருச்சி மண்டல மின்வாரிய தலைமைப்பொறியாளர் வளர்மதி முன்னிலையில் இந்த தேர்வு நடந்து வருகிறது. இதில் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றவர்கள் 30 அடி உயர மின்கம்பத்தில் 8 நிமிடத்திற்குள் ஏறி, அதன் மேல் பகுதியில் கிராஸ்ஆம் எனும் (இரும்பு) குறுக்கு சட்டத்தை இணைக்க வேண்டும். இதே போல் 2 நிமிடம், 1 நிமிடம் என மொத்தம் 3 பிரிவுகளில் தேர்வு நடக்கிறது.

இதில் தஞ்சை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மின்கம்பத்தில் ஏறுபவர்களின் பாதுகாப்புக்கு கயிறு கட்டப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

நேற்று நடந்த தேர்வில் அரியலூர் மாவட்டம் வளவட்டிக்குப்பம் கிராமம் தத்தனூர் கிழக்குத்தெருவை சேர்ந்த பெண்ணரசி கலந்து கொண்டார். இவர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார்.

இவர் 8 நிமிடத்திற்குள் மின்கம்பத்தில் ஏறி இரும்பு குறுக்கு சட்டத்தை இணைக்கும் போட்டியில் 6 நிமிடம் 43 வினாடிக்குள் ஏறி இரும்புசட்டத்தை இணைத்தார். அதே போல் கிரிப்பர்ஸ் கட்டும் போட்டியை 2 நிமிடத்திற்குள் முடிக்க வேண்டியதை 1 நிமிடம் 40 வினாடிக்குள்ளும், இரும்பு சட்டத்தை தூக்கிக்கொண்டு 100 மீட்டர் தூரத்தை 1 நிமிடத்தில் கடக்க வேண்டியதை 25 வினாடிகளிலும் கடந்தார். இதன் மூலம் அவர் முதல்வகுப்பில் தேர்வு பெற்றார். தஞ்சையில் இதுவரை நடந்த போட்டிகளில் 22 பெண்கள் பங்கு பெற்றனர். அதில் பெண்ணரசி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணரசியின் கணவர் அழகரசன். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு 42 வயதாகி விட்டதால் வயர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதையடுத்து 36 வயதான தனது மனைவி பெண்ணரசிக்கு மின்கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துள்ளார். அதன்படி தேர்விலும் வெற்றி பெற்று பணிக்கு தேர்வாகி உள்ளார். அவரை தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சங்கரன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பாராட்டினர்.

இது குறித்து பெண்ணரசி கூறுகையில், ‘‘நான் எந்த வேலை செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்வேன். வயர்மேன் பணிக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன்னர் தான் பயிற்சி பெற்றேன். எனது கணவர் தான் பயிற்சி அளித்தார். அவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். அவர், என்னால் நிரந்தர ஊழியராக முடியவில்லை. நீயாவது சாதித்துக்காட்டு என்று ஊக்கப்படுத்தினார். அதன்படி நான் வெற்றி பெற்றது சந்தோசமாக உள்ளது. இதற்கு முழு காரணம் எனது கணவர் தான்’’என்றார்.

பெண்ணரசிக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகின்றன. இவருக்கு அபர்ணா என்ற மகளும், அரவிந்த்ராஜ் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!