5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போகுதாம்…. எங்கு தெரியுமா..?


கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் கிழக்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டம் மற்றும் அதனை ஒட்டி உள்ள உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

அக்டோபர் 1 முதல் இன்று வரை பதிவான மழை நிலவரம்:-

தமிழ்நாட்டில் 40 செ.மீ.க்கு 43 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 3 சதவீதம் அதிகம்.

சென்னை 68 செ.மீ.க்கு 58 செ.மீ. அளவுதான் மழை பெய்துள்ளது. இது 14 சதவீதம் குறைவு.

புதுவைக்கு 77 செ.மீ.க்கு 54 செ.மீ பெய்துள்ளது. வேலூரிலும் மழை குறைந்துள்ளது. 33 செ.மீ.க்கு 25 செ.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த மாதம் முழுவதும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!