ஈழத் தமிழர்கள் அச்சப்பட வேண்டாம்… சொல்வது மகிந்த ராஜபக்சே மகன் நாமல்..!


இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சே குறித்து ஈழத் தமிழர்கள் அச்சமோ, கவலையோபடத் தேவை இல்லை என்று மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று கோத்தபாய ராஜபக்சே பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி குறித்து எம்.பி. நாமல் ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில், எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களில், தமிழ்பேசும் மக்களாகிய நீங்களும் உரித்துடைய பங்காளிகள் என்பதை @PodujanaParty மற்றும் புதிய ஜனாதிபதி திரு. @GotabayaR அவர்களும் உறுதிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு- கிழக்கு மக்களை வாக்களிக்க வேண்டாம் என சிலர் பிழையாக வழி நடத்த முற்பட்டபோதும் அவற்றினை நிராகரித்து தேசிய அரசியலில் நீங்கள் ஈடுபாடுடையவர்கள் என்பதை சர்வதேசத்துக்கு தெட்டத் தெளிவாக வாக்களிப்பதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள். எமக்கும் உங்களுக்கும் இடையில் குரோதங்களையும் வெறுப்பையும் நம்பிக்கையீனத்தையும் வளர்க்கும் சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகள் கதைகளை இனி நீங்கள் நம்ப வேண்டாம்.

இந்த சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை. புதிய ஜனாதிபதி பற்றியும் எமது கட்சி பற்றியும் நீங்கள் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என்பதையும் நான் வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் நாமல் ராஜபக்சே கூறியுள்ளார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!