ஜாதகப்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமைவார்கள் தெரியுமா..?


திருமணம் எனும் பந்தம் இல்லறத்தின் இனிய வரம். இதை இனிமையாக, இங்கிதமாக, இன்பமாக அனுபவிக்கும் நிறைவு எல்லோருக்கும் எளிதில் அமைவது இல்லை.

அதேபோல் மிகவும் நிறைவாக சிறப்பாக இல்லறத்தைத் தேர்வு செய்து இனிய வாழ்வியல் வாழுகின்ற சிறப்புடைய தம்பதிகளும் பலர் உண்டு.

பொதுவாகவே ஜாதக நிலையில் குடும்பஸ்தானம் களத்திரஸ்தானம் எனும் இரு நிலைகளும் மிகவும் முக்கியமான நிலைகளைப் பெறுகின்றன.இவற்றில் அமையும் கிரகங்களின் தன்மை இந்த ஸ்தானங்களின் கிரகத் தன்மை என்பன பல வகையிலும் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடுகின்றது.

எனவே ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்திரஸ்காரகன் என அமைகின்ற கிரகங்களின் தன்மைகளும் செயற்பாடுகளும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.


பொதுவாகவே துலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரு தாரப்பலன் அமையும் நிலை ஏற்படுகின்றது. இது ஜோதிட நூல்களிலும் கூறப்பட்டு இருக்கின்ற விடயம். இதற்கு உரிய காரணம் என்ன எனும் ஆய்வை மேற்கொண்டால் சந்திர சுக்கிர சேர்க்கை காரணமாகின்றது


இதற்கு இன்னும் ஒரு கேள்வி உடன் உண்டு. ரிஷப ராசியும் சந்திர சுக்கிர சேர்க்கை கொண்ட ராசிதானே. இதற்கு ஏன் இரு தாரப்பலன் ஜோதிட நூலில் கூறப்படவில்லை எனும் கேள்வியும் உண்டு. துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சிகம். இந்த விருட்சிக ராசியிலேயே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும் துலா ராசிக்கு சுகபோகஸ்தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் இந்த இரு தார நிலைக்கு காரணமாகின்றது.


அதோடு சித்திரை, சுவாதி, விசாகம் எனும் நட்சத்திரங்களின் அதிபதிக் கிரகமான செவ்வாய், ராகு, குரு என்கின்ற கிரகச் சேர்க்கையும் இதற்கு காரணமாகின்றது. எனவே துலா ராசி இரு தாரப் பலன் எனும் நிலை அமைகின்றது. இது முற்று முழுதாக எல்லாத் துலாம் ராசிக்கும் அமையாது. மேற்கூறிய குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்கு முக்கிய காரணியாகின்றது.


ஒருவரின் ஜாதகத்திலே களத்திரம் எனப்படுகின்ற 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின நிலை அமைவதும் களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெறுவதும் இரு தாரப் பலன் கொடுக்கும்.

அதேபோல் சூரியன், செவ்வாய், சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என அமையும் நிலையும் இரு தாரப் பலன் கொடுக்கும் நிலை உண்டு. அதே போல் குடும்பஸ்தான நிலையில் மேற்படி கிரகங்கள் அமைவதும் குடும்பஸ்தான கிரகங்கள் நீசபங்கம் பெறுவதும் மேற்படி இரு தாரப்பலன் அமையும் நிலைகள் ஏற்படும்.சுக்கிரன் நீச நிலை பெற்று அமைவதும் இருதாரப் பலன் அமையும் நிலையைக் கொடுக்கும்.

லாபஸ்தான அதிபதி 12 ஆம் இடம் அமைவதும் களத்திரஸ்தானக் கிரகம் 8 ஆம் இடம் மறைவு நிலை பெற்று அமைவதும் பாவிகள் சம்பந்தம் பெறுவதும் 4 ஆம், 11 ஆம் அதிபதிகள் சேர்க்கை பெற்று விரயஸ்தான 12 ஆம் இடம் அமைவதும் செவ்வாய் தோஷமுடன் அட்டமாதிபதிக் கிரகம் களத்திரஸ்தான நிலையிலே அமைவதும் இருதாரப் பலன் கொடுக்கும் நிலையுண்டு.

சுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ பெண்களால் தொல்லை அவமானம் ஏற்படும். கணவன் மனைவி மனக் கசப்புகள் அமையும். 2இல் 7 இல் சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெறுவதும் களத்திரக்காரக கிரகம் பலவீனம் அடைவதும் இரு தார பலன் கொடுக்கும் நிலை உண்டு.

சூரியன், செவ்வாய் சேர்க்கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்தாபம் பிரிவுகளைக் கொடுக்கும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்பத்தை உண்டு பண்ணும்.இந்தச் சேர்க்கை பெற்றோர் அதிகமான பெண் தொடர்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்புக் கொண்டவர்கள் பெண்களால் பலவித பிரச்சினைகளுக்கு ஆளாகின்ற நிலைகள் அமையும். எனவே மிகவும் நிதானமாக இவர்கள் செயற்பட வேண்டும்.


அதோடு கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் சம்பந்தமுடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகமுண்டு. அவை மூலம், மகம், சுவாதி, சித்திரை, கார்த்திகை, பூசம், பூரம், ஆயில்யம், ரோகினி போன்ற நட்சத்திரம் கொண்ட ஆண், பெண் இருபாலாரும் அவர்களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டியது மிக மிக முக்கியமாகும்.இதே போல் சிலருக்கு இரண்டாம் தாரம் அமையும் வாழ்வியலே மிகவும் சிறப்பாக அமையும் நிலை ஏற்படுவதுண்டு. ஆண் ஜாதக அமைப்பில் களத்திரகாரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்பதும் குடும்பஸ்தான அதிபதி பலவீனமடைந்து இருப்பதும் முதல்தார மனைவியின் சகோதரியே இரண்டாம்தார மனைவியாக அமையும் நிலை ஏற்படும்.

சந்திரன், சுக்கிரன் குடும்ப களத்திரஸ்தான நிலையிலே அமைந்து சிறப்பு நிலைபெற்று இருந்தாலும் சுபக்கிரக பார்வை பெற்றாலும் வெளிப்படையாக இரு தாரம் திருமணம் செய்யும் நிலையும் இருவரையும் சமமாகப் பேணி வாழும் தன்மையும் கொடுக்கும். இதற்கு உதாரணம் கலைஞர் கருணாநிதி, நடிகர் ஜெமினிகணேசன், கமலஹாசன், சரத்குமார், விஜயகுமார் போன்றவர்களின் ஜாதக அமைப்பாகும். எனவே இரு தாரம் என்பது மனைவியை இழந்து மீண்டும் மணம் முடிப்பதும் மனைவி இருக்கும் போதே இன்னொரு மணம் என இரு வகையில் அமைகின்றது.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!