டீன் ஏஜ் பருவத்தில் வரும் உடல் பிரச்சனைகளும்,அதற்கான தீர்வுகளும்!

டீன் ஏஜ் பெண்கள் செய்யும் சிறுசிறு செயல்கள்கூட பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பதின்பருவத்தில் வரும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் இங்கே…

  • பதின் பருவத்தில்தான் அதிகமான வளர்ச்சிதை மாற்றம் நிகழும்; உடல் மற்றும் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் டீன் ஏஜ் பெண்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின், மினரல், நல்ல கொழுப்பு, இரும்புச்சத்து, கால்ஷியம் நிறைந்த உணவுகளை சரிவிகித அளவில் உட்கொள்ள வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால், உடல் எடை அதிகமாகிவிடும். இதனால் இறுதிகட்ட பள்ளிப் பருவமும், ஆரம்பகட்ட கல்லூரிப் பருவமும் அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை தரலாம்.
  • குழந்தைப் பருவத்தில் இருந்து உணராத தன் அழகு மற்றும் உருவத்தோற்றம் குறித்தும், தன் மீது மற்றவர்கள், குறிப்பாக தன் வயதுக்கு இணையான எதிர்பாலினத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் பதின் வயதில் அதிகளவில் நினைக்கத் தோன்றும். அதனால்தான் உடுத்தும் உடை, செய்துகொள்ளும் மேக்கப் உள்ளிட்டவை பொருத்தமாக இருக்குமா, மற்றவர்களுக்குப் பிடிக்குமா, மற்றவர்கள் தன்னை என்ன சொல்வார்கள் என தனக்குள்ளேயே பல கேள்விகளை அடிக்கடி கேட்டுக்கொள்வார்கள். இவையெல்லாம் அப்பருவத்தில் உடல் ரீதியாக ஏற்படும் விஷயங்கள்தான் என்றாலும், உடல், அழகு மீதான அதீத அக்கறையும், ஈடுபாடும் கொள்ள வேண்டாம் என்பதே அவர்களுக்கான அறிவுரை. இதனால் அவர்கள் படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
  • பரு, மரு, முடி உதிர்தல், முகத்தில், கை கால்களில் அதிகம் ரோமம் வளர்தல் பருவப் பெண்களுக்கு கவலையை உண்டாக்கலாம். பெரிய ஹீல்ஸ் கொண்ட செப்பல் பயன்படுத்த, டாட்டூ குத்திக்கொள்ள, மார்டன் உடை அணிய, அடிக்கடி பியூட்டி பார்லர் செல்ல, வித்தியாசமான அக்ஸசரீஸ் பயன்படுத்த அதிக ஈடுபாடு வரும். இதனால் வீட்டில் பெற்றோருடன் பல வாக்குவாதங்களும், சிக்கல்களும் ஏற்படலாம். ‘என் தோழி செய்றா, நான் செய்யக்கூடாதா?’ என்ற வாதத்தை பருவப் பெண்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்யும் விஷயங்கள் உங்கள் குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளும் வரையறையில் இருப்பதே சரி.
  • மாதவிடாய் வலி, அதிகமான உதிரப்போக்கு, அடிவயிற்றில் விட்டு விட்டு வலி, சீரற்ற மாதவிடாய் போன்ற சிக்கல்களால் பல டீன் ஏஜ் பெண்கள் அடிக்கடி அவதிப்படுவார்கள். இதனால் அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. இது இயற்கையான ஒரு விஷயம் என்பதை உணர வேண்டும். தங்கள் உடல்நிலையைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு, சீரான இடைவெளியில் மாதவிடாய் நிகழ, தாயின் உதவியுடன் நேர்த்தியான வாழ்க்கை முறையையும், தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனையும் பெற்று, தங்கள் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • பருவப் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய சோம்பல் படுவார்கள். ‘நாம வீட்டு வேலைகளை செய்யணுமா? நெவர்’ என்ற எண்ணம் தோன்றும். காலை உணவு உள்பட தினமும் உணவு சாப்பிடவேண்டிய நேரத்துக்குச் சரியாக சாப்பிட மாட்டார்கள். வீட்டில் அம்மா, அப்பா உள்ளிட்ட யாரோ ஒருவர் பல முறை சொன்னால்தான் சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பின்னர், உடல் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுக்கும் வகையில் ஏதாவது வேலைகளைச் செய்யாமல் உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாவார்கள். அதேபோல, காய்கறிகள் தவிர்ப்பது, ஜங்க் ஃபுட் விரும்புவது என உணவு விஷயத்தில் காட்டும் அலட்சியத்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கும் ஆளாவார்கள். எனவே, சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதும், வீட்டு வேலைகள், உடற்பயிற்சி, விளையாட்டு என்று உடலுக்கு இயக்கம் கொடுக்க வேண்டியதும் முக்கியம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!