பல வருட நட்பு… பப்ஜி மோகம்… பாலிடெக்னிக் மாணவரை சுட்டுக் கொன்ற விஜய்.!


நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முகேஷின் நெற்றிப் பொட்டில் தெறித்து வந்து விழுந்தது துப்பாக்கி குண்டு.. ரத்தம் பொலபொலவென கொட்ட.. படுகாயமடைந்த முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்தவர் முகேஷ். ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் வருடம் படித்து வருகிறார்.

உதயா, விஜய் ஆகியோர் முகேஷின் நெருங்கிய நண்பர்கள்! இன்று காலை விஜய்யின் வீட்டுக்கு உதயா சென்றுள்ளார். அங்கு விஜய்யுடன் முகேஷ் ஒரு ரூமில் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, ஹாலில் விஜய்யின் அண்ணன் உதயாவும், இன்னொருரூமில் விஜய்யின் மற்றொரு சகோதர் அஜித், அவர் மனைவி இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பதறிப்போன அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடிசென்று பார்த்தனர். அப்போது, சரியாக நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து… முகேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை கண்டு அலறினார்கள். ஆனால் அதற்குள் விஜய் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி விட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து முகேஷ் உயிருக்கு போராடினார்.

இதையடுத்து, முகேஷ் குமாரை மீட்ட அவர்கள் ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் முகேஷ் உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக தாழம்பூர் போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், விஜய்யின் அண்ணன்கள் உதயா, மற்றும் அஜீத்தை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருவருமே வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மோதல் காரணமாகவே முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கக்கூடும் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும் நண்பர்களுக்குள் என்ன சண்டை, தகராறு எனமுழுமையாக தெரியவில்லை.. மோதலால் நடந்ததா? அல்லது முன் விரோதம் காரணமாக நடந்ததா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் துப்பாக்கியால் சுட்டு தப்பி சென்ற விஜய்யை காணவில்லை.. தலைமறைவாக இருப்பதால் தாழம்பூர் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்ட வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இளைஞர் கையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது அதைவிட அதிர்ச்சியாக உள்ளது. ஏனெனில் அது நாட்டுத் துப்பாக்கியாம். ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் வேலை பார்த்து வருகிறார் விஜய் என்கிறார்கள். இவருக்கு எப்படி இந்த துப்பாக்கி கிடைத்தது என்பதுதான் வியப்பாக உள்ளது.

இதை பற்றி விசாரிக்கும்போது, இவர்கள் இருவருமே ரொம்ப வருட நண்பர்களாம். இவர்களுக்கு பப்ஜி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த விளையாட்டை பொறுத்தவரை, ஒன்றாக சேர்ந்து விளையாடினாலும், இந்த விளையாட்டை தனித்தனியாக ஹெட்போன் மாட்டிக் கொண்டு விளையாடலாம். அதன்படி, 2 குரூப்பாக விளையாடுவதும் உண்டு.. அதில், “டேய் உன் ரூம்ல.. உனக்கு முன்னாடி ஒருத்தன் இருக்கான்டா.. அவனை சுடுடா” என்று சிக்னல் தந்தால் நிஜமாகவே சுட்டு விடுவார்கள். அப்படித்தான் இந்த சம்பவமும் நடந்தாக கூறப்படுகிறது “சுடுரா.. சுடுரா..” என்று கத்தியதாகவும், அப்போது நடந்த சண்டையில் முகேஷை விஜய் சுட்டு கொன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!