பெற்ற மகளை வைத்தே காதலனைக் கொன்று புதைத்த குடும்பம்..!


உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள கிரிதர் காலனி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தவர், 29 வயது பங்கஜ் சிங். நான்காம் ஆண்டு சட்டப்படிப்பு படித்துவரும் இவர், அதே பகுதியில் ஓர் இணைய மையம் நடத்தி, அதன்மூலம் கணிசமாகப் பணம் சம்பாதித்துவந்துள்ளார். முன்னதாக, பங்கஜ் சிங்குக்கும் அவரது வீட்டு உரிமையாளருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டதால் அந்த வீட்டைக் காலிசெய்துவிட்டு, அதே கிரிதர் காலனியில் வேறொரு வீட்டில் குடியேறியுள்ளார் பங்கஜ்.

இந்நிலையில், `பங்கஜைக் காணவில்லை’ எனக் கடந்த மாதம் 9-ம் தேதி, அவரின் சகோதரர் ஷாகிதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, பங்கஜ் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான், பங்கஜுக்கும் அவரது முன்னாள் வீட்டு உரிமையாளர் ஹரியோம் என்கிற முன்னாவுக்கும் இடையே நடந்த மோதல் பற்றித் தெரியவந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய போலீஸார், “பங்கஜ் நடத்திவந்த இணைய மையத்தின் வளர்ச்சியைக் கண்டு, அவரின் முன்னாள் வீட்டு உரிமையாளர் முன்னா, பொறாமைப்பட்டுள்ளார். இதனால் முன்னாவும் அவரது மனைவியும் பங்கஜை மிரட்டி, அவரின் இணைய மையத்தைக் குறைந்த விலைக்குத் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு பங்கஜ் ஒப்புக்கொள்ளாததால், அவருக்கு நிறைய தொந்தரவுகளைச் செய்துள்ளனர். இதன் காரணமாகவே அவர் வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பங்கஜ் காணாமல் போன வழக்கில், முன்னா மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது சந்தேகம் எழுந்ததால், அவர்களிடம் விசாரணை நடத்தினோம். விசாரணைக்குப் பிறகு, முன்னாவும் அவரது குடும்பத்தினரும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அவர்மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, கடந்த மாதம் 15-ம் தேதி முன்னாவின் வீட்டில் நடந்த சோதனையில், வீட்டுக்குப் பின் பகுதியில் உள்ள ஒரு குழியில் பங்கஜின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.

பின்னர், பங்கஜ் காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றி தப்பிச் சென்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு ரயில் நிலையத்தில் முன்னாவின் மொத்த குடும்பமும் இருந்ததை அறிந்த காவலர்கள், விரைந்துசென்று அனைவரையும் கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்னாவின் வாக்குமூலம் பற்றிப் பேசியுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் மனீஷ் மிஷ்ரா, ” கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாவுக்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் நான்கு பேருக்கும் பங்கஜ் டியூஷன் எடுத்துவந்துள்ளார். அப்போது, முன்னாவின் மூத்த மகள் அங்கிதாவுக்கும் பங்கஜுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனியே சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது, அங்கிதாவைத் தன்னுடனேயே இருக்கும்படியும் தன் ஆசைக்கு சம்மதம் தெரிவிக்கும்படியும் பங்கஜ் கேட்டுள்ளார். இதை அங்கிதா ஏற்க மறுத்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில், இந்த விவகாரம் அங்கிதாவின் தந்தை முன்னாவுக்குத் தெரியவர, அவர் தன் குடும்பத்தினருடன் இணைந்து பங்கஜைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். எப்படியோ அங்கிதாவையும் மூளைச் சலவை செய்து, அவரை வைத்தே கொலைத் திட்டத்தையும் அரங்கேற்றியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 9-ம் தேதி அங்கிதா, பங்கஜுக்கு போன் செய்து, ‘என் வீட்டில் யாரும் இல்லை, நீ வீட்டுக்கு வா’ என அழைத்துள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு வீட்டுக்குச் சென்ற பங்கஜை, வீட்டுக்குப் பின்னால் அழைத்துச் சென்றுள்ளார் அங்கிதா. அங்குள்ள குளியலறையில் அங்கிதாவின் மொத்த குடும்பத்தினரும் ஒளிந்திருந்தனர். பங்கஜ் வந்ததும் அவரைப் பின்னால் இருந்து தாக்கியுள்ளனர். பின்னர், அவரின் இரு கைகளையும் கட்டிக் கொடூரமாகக் கொலை செய்து, ஏற்கெனவே தயாராகத் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் தள்ளிப் புதைத்துள்ளனர்.

அதன்பிறகு, எதுவும் நடக்காதது போல் மிகவும் சாதாரணமாகவே இருந்துள்ளனர். அங்கிதாவும் எப்போதும்போல் வெளியில் சென்று வந்துள்ளார். பங்கஜ் காணாமல்போனதாக நடந்த விசாரணைக்குப் பிறகு, அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இணைய மையம் காரணமாகவே பங்கஜ் கொலை செய்யப்பட்டிருப்பார் என நினைத்த நிலையில், முன்னாவின் குடும்பம் அளித்த வாக்குமூலம் சற்று அதிர்ச்சியாகவே உள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!