சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல்… ஆசிரியைக்கு நடந்த பரிதாபம்..!


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டெங்கு காய்ச்சலுக்கு ஆசிரியை பலியான சம்பவத்தையடுத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு முத்தாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபு. இவரது மனைவி சத்யாதேவி (வயது 32). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ரோகித் (5), மோகித் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சத்யாதேவிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து சத்யாதேவி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1-ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை சத்யாதேவி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சத்யாதேவியின் உடல் நேற்று மாலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் சுகாதார சீர்கேட்டால் தான் சத்யாதேவி டெங்கு காய்ச்சலால் இறந்ததாக கூறி கீழநாஞ்சில் நாடு மெயின்ரோட்டில் பா.ஜனதா கட்சியின் நாகை மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்பாலு, நகர தலைவர் மோடிகண்ணன், மற்றும் சத்யாதேவியின் உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, மண்டல துணை தாசில்தார் வைத்தியநாதன், துப்புரவு ஆய்வாளர் பிச்சைமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுபற்றி அரசு அலுவலர்கள் முன்னிலையில் மேற்கண்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலைமறியலால் தரங்கம்பாடி மெயின்ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!