தினகரனுடன் புதுவை எம்.பி திடீர் சந்திப்பு.. அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு..!


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேச்சை வேட்பாளராக நின்று அமோக வெற்றி பெற்றார். அப்போது டி.டி.வி.தினகரன் எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருவார்கள் என்று தெரிவித்தார்.

கடந்த 24-ந்தேதி மாலை வேலூர் எம்.பி. செங்குட்டுவன் டி.டி.வி.தினகரனை சந்தித்து தன்னுடைய ஆதரவை வழங்கி பிள்ளையார் சுழி போட்டார். இதையடுத்து அ.தி.மு.க. அதிருப்தி எம்.பி.யான சசிகலா புஷ்பா நேற்று முன்தினம் மாலை சென்னை அடையாரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு வந்தார். வீட்டுக்குள் சென்ற அவர், டி.டி.வி.தினகரனுக்கு பூங்கொத்து வழங்கி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், வெளியே வந்த அவர் நிருபர்களிடம், ‘டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிப்பதாகவும், அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும்’ கூறினார்.


இந்த நிலையில் புதுச்சேரி மாநில அ.தி.மு.க.வை சேர்ந்த டெல்லி மேல் சபை எம்.பி. கோகுல கிருஷ்ணன் நேற்று மாலை சென்னை அடையாரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு சென்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், வெளியே வந்த கோகுல கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘டி.டி.வி.தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் இல்லை. இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில் என்னுடைய அரசியல் பயணம் இருக்கும்’ என்றார்.

கோகுல கிருஷ்ணன் கடந்த மாதம் தான் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, முதல்வர் அணியில் உள்ள அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள் என்று டி.டி.வி தரப்பினர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், மூன்று எம்.பி.க்கள் தினகரனை சந்தித்துள்ளது, அணி மாறும் படலத்திற்கு பிள்ளையார் சுழியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!