என் குழந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – சுஜித்தின் தாய் உருக்கம்..!


‘சுஜித்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’, என்று சுஜித்தின் தாய் தெரிவித்தார்.

சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் கூறியதாவது:-

வேண்டிய மக்களுக்கு நன்றி

ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தவுடன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தோம். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு உள்பட அனைத்து துறையில் இருந்தும் அதிகாரிகள் வந்தனர். 4 நாட்களாக முடிந்த எல்லா உதவிகளையும் அதிகாரிகள் செய்தனர். தீவிரமாக உழைத்தனர். இந்த நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். என் குழந்தை மீண்டு வர வேண்டிக்கிடந்த அனைவருக்குமே என் நன்றிகள்.

நான் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறேன். எனது மனைவி பிளஸ்-2 வரை படித்துள்ளார். எனது மனைவிக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். இது குறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளார்”.

இவ்வாறு அவர் கூறினார்.

கடைசியாக இருக்க வேண்டும்

சுஜித்தின் தாய் கலாமேரி கூறியதாவது:-

ஆழ்துளை கிணற்றில் விழுந்த என் மகன் அழுதான். அதை நானே பார்த்து துடித்தேன். குழிக்குள் இருந்தபடியே ‘அம்மா… அம்மா…’ என்று என்னை கூப்பிட்டான். ‘அழுவாத சாமி… உன்ன வெளியே தூக்கிடுறேன்’, என்று நானும் சொன்னேன். ஆனால் முடியவில்லை. என் குழந்தைக்காக உலகம் முழுவதிலும் சிறியவர் முதல் பெரியவர் எல்லா தரப்பிலும் இருந்து வேண்டிக்கொண்டு இருந்தீர்கள். உங்கள் அனைவருக்குமே நன்றி. அதிகாரிகள் எல்லாருமே தீவிரமாகத்தான் பணிபுரிந்தார்கள். பாறையாக இருந்ததால் தான் அவர்களால் என் மகனை சீக்கிரம் எடுக்க முடியவில்லை. மற்றபடி மீட்பு பணியில் குறை சொல்லவே முடியாது.

ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் தொடர கூடாது. எனது மகனின் இறப்பே கடைசியாக இருக்க வேண்டும். வெயில் மழை பாராது சுஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என போராடிய அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!