சுஜித்தின் மரணம் வேதனை அளிக்கிறது; நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்


திருச்சி மணப்பாறை அருகே 25ந்தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் நேற்றிரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாக அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

இதனிடையே, ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்தாவது நாளில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குழந்தை சுஜித் மரணம் மனதிற்கு அதிக வேதனை அளிக்கிறது. குழந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் ரசிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அந்த குழந்தை உயிருடன், நலமுடன் மீண்டு வரவேண்டும் என்று அந்த ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறேன். இதுபோன்ற விவகாரங்களில், பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் நிறைய விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

அரசின் மீட்பு பணி பற்றி கூறிய அவர், அரசு முயற்சி செய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறப்புடன் இருக்கும். விடாமுயற்சியுடன் மீட்பு பணிகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது. அவர்களை குறை கூற முடியாது என்றும் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!