சேலத்தில் வாலிபர் கொடூரமாக அடித்துக்கொலை.. அதிர வைத்த காரணம்..!


சேலத்தில் பட்டாசு வெடித்ததில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் அம்மாபேட்டை நசிமுல்லா மக்கான் தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (வயது 23). பஞ்சர் கடையில் கூலி வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முகமது சாபீர். நேற்று முன்தினம் இரவு இவர், தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை வித்யாநகர் 8-வது கிராஸ் பகுதியாக வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.

அதில், ஒரு பட்டாசு முகமது சாபீர் மீது விழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பட்டாசு வெடித்த இளைஞர்களை அழைத்து கண்டித்தார். அப்போது, அங்கிருந்த இளைஞர்களுக்கும், முகமது சாபீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக முகமது சாபீர், தனது நண்பர்களுக்கு போன் செய்து நடந்த விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து அபுபக்கர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களும் வித்யா நகருக்கு சென்றனர்.

இது பற்றி அறிந்த எதிர்கோஷ்டி தரப்பினரும் அங்கு திரண்டு வந்தனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் இரும்பு கம்பியாலும், கல்லாலும் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில், அபுபக்கர் மற்றும் முகமது சாபீர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அபுபக்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகமது சாபீர் படுகாயத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக அம்மாபேட்டை பெரியகிணறு பகுதியை சேர்ந்த கபீர், கவுதம், அஜித், பாலன் உள்பட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட அபுபக்கரின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால், கொலையாளிகளை கைது செய்யும் வரை ஆம்புலன்சில் இருந்து உடலை எடுக்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் ஆனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொலையாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்த அவர்கள், ஆம்புலன்சில் இருந்து உடலை வீட்டிற்குள் எடுத்து சென்றனர். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொலை செய்யப்பட்ட அபுபக்கரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிஸ்மில்லா கட்சியின் தலைவரும், வக்கீலுமான ஷாஜகான் என்பவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பட்டாசு வெடித்ததில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!