இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலையால் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 16-ந் தேதி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தினமும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது.

வங்கக் கடல், அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் சென்னை உள்பட வடமாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.

அரபிக் கடலில் உருவான கற்றழுத்த தாழ்வு புயலாக மாறி ஏமன் நாட்டை நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் குறைந்தது.

இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

தென் மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவானது. இது படிப்படியாக நகர்ந்து இலங்கைக்கு கீழே தற்போது மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோடை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு தென் மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு இருக்கும் வரை நல்ல மழை தமிழகத்துக்கு கிடைக்கும். இந்த காற்றழுத்தழுத்த தாழ்வு புயலாக மாறும்போது தான் சேதத்தை ஏற்படுத்தும்.

எனவே காற்றழுத்த தாழ்வு எங்கு நோக்கி நகர்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போது இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் கன மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!