ரொம்ப நன்றிப்பா.. கொள்ளையன் முருகனுக்கு நன்றி சொன்ன லலிதா ஜுவல்லரி ஓனர்!


லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு முக்கிய மூல காரணமான கொள்ளையன் முருகனை நகை ஓனர் கிரண்குமார் சந்தித்து பேசியுள்ளார். முருகனுக்கு நன்றியும் சொல்லி உள்ளார்.. ஏன் தெரியுமா?

லலிதா ஜுவல்லரி கொள்ளை நடந்தபோது, அந்த கடையின் ஓனர் செய்தியாளர்களிடம் பேட்டி தந்திருந்தார். அதில், எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது குறித்து கணக்கு தெரிவித்திருந்தார்.

அப்போது ஒருசிலர், கிரண்குமார் வேண்டும் என்றே நகைகளை காணோம் என்று சொல்கிறார் என்றும், கொள்ளை நடந்ததில் வேறு என்னமோ காரணம் இருக்கிறது என்றும் சொன்னார்கள். ஆனால், இந்த அனுமானத்திற்கெல்லாம் கிரண்குமார் எந்த பதிலையும் சொல்லவில்லை.

ஆனால், 2 நாளைக்கு முன்பு கேங் லீடர் முருகனை பார்க்க வேண்டும், அரை மணி நேரம் பேச வேண்டும் என்று கேட்டுள்ளார். இப்போதைக்கு தமிழக போலீசாரின் விசாரணை பிடியில் முருகன் இருக்கிறான். அதனால் நம் போலீசாரிடம் ஜுவல்லரி ஓனர் அனுமதி கேட்கவும், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பிறகு 15 நிமிஷமாவது பேசிக்கிறேன்.. ப்ளீஸ் அனுமதி தாங்க.. என்று ஓனர் கேட்க, அதற்கு உயர் அதிகாரிகளும் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடங்கள் முருகனுடன் பேச வாய்ப்பு தந்தார். ஆனால், அதிகாரிகளும் பேசும்போது கூடவே இருந்தனர்.. அவர்கள் பேசுவதும் பதிவு செய்யப்பட்டது. அப்போது ஓனர் முருகனிடம் ஒரு கேள்வி கேட்டார்.

“எனக்கு நிறைய இடத்துல கிளைகள் இருக்கு… ஆனா, குறிப்பா திருச்சியில் மட்டும் வந்து திருட என்ன காரணம்? எந்த சுவற்றில் ஓட்டையை போட்டால் நகை உள்ள இடத்திற்கு கரெக்ட்டாக வர முடியும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டார்.

அதற்கு முருகன், “நானும் என் மனைவியும் 10 முறைக்கு மேல இதே கடைக்கு நகை வாங்க வந்திருக்கிறோம். அவள் நகையை பார்த்து கொண்டு இருப்பாள்.. நான் கடையை நோட்டமிட்டு, எப்படி உள்ளே வர முடியும் என்று பிளான் போட்டுட்டு இருப்பேன்.. அதன்படிதான் உள்ளே வந்தோம்” என்றான். அதற்கு ஓனர், “ஓ.. அப்படியா.. எனக்கு குழப்பம் தீர்ந்தது.. ரொம்ப நன்றிப்பா” என்றார். உடனே முருகன்,”சார், எனக்கு ஏன் நன்றி சொல்றீங்க?” என்று கேட்டான். அதற்கு ஓனர் சொன்ன பதில் இதுதான்:

“இல்லை… எனக்கு திருடு போன நகையை பத்தி கூட கவலை இல்லை. ஏன்னா இன்சூரன்ஸ் செய்துள்ளேன். அதனால அதைவிட அதிகமாக சம்பாதிக்க என்கிட்ட தைரியம் இருக்கு. என் கவலை எல்லாம், இவ்வளவு பெரிய கடையில், இவ்ளோ வாட்ச்மேன்கள், செக்யூரிட்டிகள் இருக்கும் இடத்தில், ஓட்டை போட்டு உள்ளே வர, உனக்கு தைரியம் எப்படி வந்தது? நிச்சயமாக கடையில் வேலை பார்க்கும் யாராவது உதவி இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை ரொம்பவும் குழப்பி கொண்டே இருந்தது.

அதைவிட என் கவலையெல்லாம், என் கடையில் வேலை பார்ப்பவர், திருடும் அளவிற்கு துணிகிறார்கள் என்றால், என் மீது என்ன குறை இருக்கு? அந்த குறையை நான் உடனே சரி செய்ய வேண்டும். அந்த ஊழியரின் பணத் தேவை எனக்கு ஏன் தெரியவில்லை? ஒருவேளை நான் அவர்களை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்? அதை சரி செய்யணுமே என்று நினைத்து கவலையா இருந்தேன். அதனாலதான் உன்னை பார்த்து அதை தெளிவுபடுத்திக்க முயற்சி பண்ணேன்” என்றார்.

இப்படி ஒரு பதிலை முருகன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. மலைத்து போய் ஓனரை பார்த்து கொண்டே நின்றான். ஓனர் பேசியதை பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த, ஒரு போலீஸ் அதிகாரி “ராயல் சல்யூட் சார்” என்று சொன்னார். இதை அவர் தனது பதிவுகளில் பகிர்ந்தும் உள்ளார்.

இவங்க மட்டும் எப்படி இப்படி கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று நாம் அசால்ட்டாக சொல்லி விடுகிறோம். ஆனால், ஒரு தொழிலாளியின் மனநிலையில் இருந்து பார்ப்பதுதான் ஒரு முதலாளியின் கடமை என்பதை இந்த ஓனர் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். தொழிலாளிகள் நல்லா இருந்தால்தான் முதலாளிகள் நன்றாக இருக்க முடியும் என்பதே இதுபோன்ற முன்னுக்கு வந்தவர்களின் சாதனையாக உள்ளது.. உண்மையிலேயே… எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவதில்லை.. எதை, யாருக்கு, எப்போ, எவ்வளவு, தர வேண்டும் என்பதை உணர்ந்து காலம் உரியவர்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!