தனியார் ஓட்டலின் பின்புறம் பெண் என்ஜினீயர் மர்மமாக சாவு..? புனித் என்பவர் யார்..?


ஹாசன் டவுனில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் பின்புறம் பெண் என்ஜினீயர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பவிதா(வயது 23). என்ஜினீயரான இவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 12 நாட்களாக ஹாசன் டவுன் பி.எம்.சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் இவர் ஓட்டலின் பின்புற பகுதியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. இதுபற்றி அறிந்த ஓட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து ஹாசன் டவுன் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. மேலும் அவருடைய இடது கையில் புனித் என்று பச்சை குத்தியிருந்தார். இதையடுத்து போலீசார் பவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து படாவனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பவிதாவின் சாவு மர்மமாக உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. அரக்கல்கோடுவில் சொந்த வீடு இருக்கும்போது பவிதா ஏன் ஹாசனில் உள்ள ஓட்டலில் தங்கினார்?, அவருடன் வேறு யாராவது தங்கி இருந்தார்களா?, அவர் கையில் பச்சை குத்தியிருக்கும் புனித் என்பவர் யார்? என்று இவ் வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அதுபற்றி விசாரித்து வருகிறோம்.

மேலும் அந்த தனியார் ஓட்டலில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார். பவிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோரும் புகார் அளித்துள்ளனர். விரைவில் இவ்வழக்கில் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம். பிரேத பரிசோதனை அறிக்கையையும் விரைவாக சமர்ப்பிக்கும்படி டாக்டர் களிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!