கள்ளக்காதல் தகராறில் கணவன் – மனைவி வெட்டிக் கொலை – நாமக்கல்லில் பரபரப்பு..!


கள்ளக்காதல் தகராறில் கணவன் – மனைவியை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல், சேந்தமங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 26). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி அனிதா (23). இவர்களுக்கு திருமணம் நடந்து 1½ ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது.

விமல்ராஜ் காமராஜர் நகரில் உள்ள தனது மாமனார் கருப்பசாமி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு காரில் வந்த ஒரு மர்ம கும்பல் திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்து விமல்ராஜ் மற்றும் அனிதா ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதை தடுக்க வந்த அனிதாவின் தந்தை கருப்பசாமி (50)யையும் அந்த கும்பல் வெட்டியது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இந்த கொடூர தாக்குதலில் விமல்ராஜ், அனிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கருப்பசாமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த நாமக்கல் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார், விமல்ராஜ் மற்றும் அனிதா ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைகள் பற்றி போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர், 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கூண்டோடு கைது செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படைகளில் டி.எஸ்.பி, மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

போலீசார், அனிதா மற்றும் விமல்ராஜியின் உறவினர்களிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

சேலத்தை சேர்ந்தவர் நிக்கல்சன். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் நாமக்கல்லில் குடியேறி நாமக்கல் பஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இதைபோல் பஸ் நிலையத்தில் விமல்ராஜ் பழக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அனிதாவின் அண்ணன் அருண் என்பவர் கோவையில் எலக்ட்ரீசியன் தொழில் கான்ட்ராக்ட் அடிப்படையில் எடுத்து செய்து வருகிறார்.

இதனால் நிக்கல்சனுக்கும், அருணுக்கும் இடையே தொழில் நிமித்தமாக பழக்கம் ஏற்பட்டது. கோவையில் இருந்து சொந்த ஊரான நாமக்கல்லுக்கு வரும்போதெல்லாம், நிக்கல்சனை அருண் சந்தித்து பேசுவார். அப்போது நிக்கல்சன் மனைவியுடன் அருணுக்கு பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நெருங்கி பேசி, பழகி வந்தனர்.

இந்த தொடர்பு நீண்ட காலமாக நீடித்தது. இவர்கள் பழக்கம் வேறு திசைக்கு மாறியதை அறிந்த நிக்கல்சன் மனவேதனை அடைந்தார். தனது மனைவியை அழைத்து கண்டித்தார். இனிமேல் அருணுடன் பேசாதே என்று சத்தமும் போட்டுள்ளார்.

மேலும் விமல்ராஜியிடமும், உனது மைத்துனர் அருணை கண்டித்து வைக்கும்படி கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த நிக்கல்சன் மனைவியை கடந்த ஒரு வாரமாக காணவில்லை. இதனால் கோபம் அடைந்த, அவர், அருணை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக, நேற்று இரவு செல்போனில் தொடர்பு கொண்டு அருணிடம் நீ எங்கு இருக்கிறாய்? எனது மனைவியை காணவில்லை. இது குறித்து உன்னிடம் பேச வேண்டும். ஒரு இடத்தை கூறி, அங்கு வர முடியுமா? என கேட்டுள்ளார். அதற்கு அருண் மறுக்கவே, எனது மனைவி மாயமானதற்கு நீதான் காரணம் என கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது

இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கல்சன், நாமக்கல் காமராஜர் நகரில் உள்ள வீட்டில் தான் அருண் இருப்பார் என நினைத்து அவரை தேடி கூலிப்படையினருடன் அங்கு வந்தார். அங்கு, அருண் வீட்டில் இல்லை.

இதனால் கடும் கோபம் அடைந்த நிக்கல்சன் கூலிப்படையினருடன் சேர்ந்து அருணின் தங்கை அனிதா மற்றும் இவரது கணவர் விமல்ராஜ், அனிதாவின் தந்தை கருப்பசாமி ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது.

தலைமறைவாகியுள்ள எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் நிக்கல்சன் மற்றும் கூலிப்படை கும்பலை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

அண்ணனை கொலை செய்ய வந்த இடத்தில், தங்கையும், தங்கையின் கணவரையும் கூலிப்படை கும்பல் தீர்த்துக்கட்டியுள்ள சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!