மருமகளை வரவேற்க மகளை கொன்றுவிட்டீர்கள்..? – பேனர் ஜெயகோபாலுக்கு ஐகோர்ட் கண்டனம்..!


பேனர் விவகாரத்தில் உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்? என பேனர் ஜெயகோபாலுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ, பேனர் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக, அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின் பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தது. பேனர் விழுந்த பிறகு இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தது ஏன் என ஜெயகோபாலிடம் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. உங்கள் மருமகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுள்ளீர்கள் என ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது.

விபத்து நடத்த பிறகு வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன் என ஜெயகோபால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!