முதன்முதலாக ஐ.ஏ.எஸ். ஆன பார்வையற்ற பெண் – துணை கலெக்டராக பதவியேற்பு..!


பார்வையிழ்ந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காமல் படித்து ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றவர் என்ற சிறப்புக்குரிய பிரஞ்சால் பட்டில் திருவனந்தபுரம் துணை கலெக்டராக பதவி ஏற்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டதில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில். 6 வயதில் சூரியனை தொடர்ந்து உற்று நோக்கியதால் கண் பார்வையை இழந்த இவர், தன்னம்பிக்கையை இழக்காமல் பள்ளி கல்வியை படித்து முடித்தார்.

பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்று, சர்வதேச உறவுகள் தொடர்பான தனிப்பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.


2016-ம் ஆண்டில் 26 வயதானபோது ஐ.ஏ.எஸ். எனப்படும் இந்திய ஆட்சி பணி தொடர்பான பட்டம்பெற விரும்பிய பிரஞ்சால் பட்டில், அதற்குரிய பாடங்களை வாசித்து காட்டும் மென்பொருளின் உதவியுடன் கற்று, 2017-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேசிய அளவிலான தரப்பட்டியலில் 124-வது இடத்தை பிடித்தார்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி என்ற சிறப்பை பெற்ற பிரஞ்சால் பட்டில், முசோரியில் உள்ள லால் பகதூர் தேசிய நிர்வாக இயல் கழகத்தில் பயிற்சி பெற்று அதே ஆண்டில் கேரள மாநிலத்தில் உள்ள எர்னாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பணியாற்றினார்.

வாழ்த்திய அதிகாரிகள்

இந்நிலையில், எர்னாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்ற பணி அனுபவத்தின் அடிப்படையில் திருவனந்தபுரம் மாவட்ட துணை கலெக்டராக பிரஞ்சால் பட்டில்(31) இன்று பதவியேற்றார்.

இரு கண்களில் பார்வை பறிபோன நிலையிலும் தன்னம்பிக்கையுடன் படித்து இந்த நிலைக்கு முன்னேறியுள்ள பிரஞ்சால் பட்டில், தனது உழைப்பு மற்றும் திறமையால் விரைவில் கலெக்டர் என்ற உயர வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!