பெண்களுக்கு நீர்க்கட்டி வருவதற்கான காரணங்கள்..!


நீர்க்கட்டிகள் தோன்றுவதற்குரிய மரபணு ஒவ்வொருவரிடத்தில் இருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகள் ஒன்றிணையும் போதுதான் பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உண்டாகிறது.

இன்றைய திகதியில் இளம்பெண்களுக்கு பி.சி.ஓ.டி எனப்படும் நீர்க்கட்டிகளுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் இதுகுறித்து பெற்றோர்களும், இவர்களும் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் மருத்துவர்கள் இந்த நீர்கட்டிகள் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஒவ்வொரு பெண்களுக்கும் நீர்க்கட்டிகள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறு உண்டு என்றாலும், அவை பாரம்பரிய மரபணுவின் காரணமாகவும், அதனை தூண்டுவதற்குரிய நடைமுறை நிகழ்வுகளை தொடர்ந்து மேற்கொள்வதினாலும் தான் நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. அதாவது நீர்க்கட்டிகள் தோன்றுவதற்குரிய மரபணு ஒவ்வொருவரிடத்தில் இருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகள் ஒன்றிணையும் போதுதான் பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உண்டாகிறது.

இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் பரீட்சையின் போதே அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற மன அழுத்தம் உண்டாகிறது. இது ஏ லெவல் மற்றும் உயர் கல்வியிலும் தொடர்கிறது. படிப்பதில் கவனம் செலுத்துவதால் உறக்கத்தின் அளவும், கால அவகாசமும் குறைகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவுகளை உண்பதாலும், பக்கரி தயாரிப்புகள் மற்றும் துரித உணவுகளை உண்பதாலும், உடற்பயிற்சி என்பதே இல்லாததாலும், நீர்க்கட்டிகள் வருவதற்கான சாத்தியக்கூறை நாம் உண்டாக்கிக் கொள்கிறோம்.

ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு நீர்க் கட்டிகள் வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன், தவறாமல் பரிசோதனைகளை செய்து கொண்டு, பாதிப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்ற வேண்டும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!