‘செல்பி’ விபரீதம்.. கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண்ணுக்கு நடந்த சோகம்..!


ஊத்தங்கரை அருகே பாம்பாற்றில் செல்பி எடுக்க முயன்ற கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒட்டப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள்கள் கனிதா (வயது 19), சினேகா (18), மகன் சந்தோஷ் (14).

இவர்களில் கனிதா, சினேகா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார்கள். சந்தோஷ் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

அதே ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவர் இளங்கோவின் அக்காள் மகள் ஆவார். இவருக்கும் பர்கூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் பிரபு- நிவேதா தம்பதியினர் நேற்று ஊத்தங்கரையில் உள்ள ஒரு தியேட்டரில் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார்கள். அவர்களுடன் கனிதா, சினேகா, சந்தோஷ் ஆகியோரும், அவர்களது உறவினரான யுவராணி என்பவரும் சென்று இருக்கிறார்கள். 6 பேரும் தியேட்டரில் படம் பார்த்துள்ளார்கள்

மாலையில் மாரம்பட்டி வழியாக பாம்பாறு அணையை சுற்றி பார்க்க வந்தனர். அணையின் அழகை கண்டு ஆனந்தம் அடைந்த அவர்கள் விபரீதம் அறியாமல் செல்பி எடுக்க முடிவு செய்தனர். அதுவும் அணை அருகில் மொத்தமாக நின்று செல்பி எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்த செல்பி எடுப்பதற்காக கனிதா, சினேகா, சந்தோஷ், புதுப்பெண் நிவேதா மற்றும் யுவராணி ஆகியோர் தண்ணீரில் நின்று கொண்டிருக்க பிரபு தண்ணீரை ஒட்டியவாறு கரையில் நின்று கொண்டு அவர்களுடன் தனது செல்போன் மூலம் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.


அப்போது எதிர்பாராதவிதமாக கனிதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் தவறி விழுந்துவிட்டார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டபடி யுவராணியை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதை கண்டு பிரபுவும், யுவராணியும் கதறி அழுதவாறு கூச்சலிட்டார்கள். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து ஊத்தங்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த, கனிதா, சினேகா, சந்தோஷ், நிவேதா ஆகிய 4 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அணையில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் ஊத்தங்கரை ஒட்டப்பட்டி கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 19 பேர் நீரில் மூழ்கி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!