காந்தியை கன்னியாகுமரி கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தது ஏன்..?


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? என்பது குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

அன்னியரின் ஆதிக்கத்தில் இருந்து பாரதத்தை விடுதலையை நோக்கி நகர்த்திய காந்தியடிகள், மறுபுறம் சொந்த நாட்டினரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போடப்பட்டு இருந்த அடிமை விலங்கொடிக்கவும் பாடுபட்டார்.

இதில் தலித் பிரிவினர் கோவிலுக்குள் நுழையும் உரிமைக்காக போராடியது முக்கியமானது. இந்த வழிபாடு பாகுபாட்டை அவரே ஒருமுறை அனுபவித்தும் இருந்தார். அது கடந்த 1925-ம் ஆண்டு நடந்தது.

அந்த ஆண்டு அவர் புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு முதலில் கோவிலை சுற்றி வந்த அவர், பின்னர் கோவிலுக்குள் செல்ல முயன்றார்.

ஆனால் அவரை கோவிலுக்குள் செல்ல விடாமல் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். காந்தியடிகள் ஏற்கனவே இங்கிலாந்து சென்றிருந்ததால், அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர்.

இந்துக்கள் கடல் கடந்து வெளிநாட்டுக்கு செல்வது தீட்டானது என கருதும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது. இந்த வழக்கத்தை மீறுபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு கடல்கடந்து சென்று திரும்புபவர்கள் பரிகார பூஜைகள் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் நிலை இருந்தது. இதனால்தான் காந்தியடிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து தனது நவஜீவன் பத்திரிகையில் வேதனையுடன் கட்டுரை ஒன்றை எழுதினார்.

1925-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி வந்த அந்த கட்டுரையில், ‘இந்த வழக்கம் பழங்காலத்தில் இருந்தே பின்பற்றப்படுகிறதா? வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் கோவிலுக்குள் செல்வதால் கன்னியாகுமரியை மாசுபடுத்த முடியுமா? இதை எப்படி சகிக்க முடியும்?’ என்று ஆவேசமாக கேள்விகளும் எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கம் ஒரு பாவச்செயல் என்றும் கூறியிருந்த காந்தியடிகள், இந்த களங்கத்தை நீக்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

அவர் கூறியவாறே இந்த வழக்கம் விரைவில் முடிவுக்கும் வந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புகழ்பெற்ற மகாராஜா ஸ்ரீ சித்திரை திருநாள் பாலராம வர்மா, வெளிநாட்டு பயணத்தை முன்வைத்து கோவிலுக்குள் நுழைய போடப்பட்டிருந்த தடையை விலக்கினார். அத்துடன் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் செல்லும் உரிமையையும் அவர் வழங்கினார்.

அதன்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த இந்து கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கும் பிரகடனத்தை 1937-ம் ஆண்டு அவர் வெளியிட்டார். 1937-ம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சிக்கு காந்தியடிகளையும் சிறப்பு விருந்தினராக அவர் அழைத்திருந்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து கேரளாவை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியும், காந்தியவாதியுமான 106 வயதான ஐயப்பன் பிள்ளை கூறுகையில், ‘அந்த நிகழ்ச்சி இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. திருவனந்தபுரம் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் காந்தியடிகளும் பங்கேற்றார். பின்னர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு கோவில்களுக்குள் நுழைந்தார்’ என்று உற்சாகமாக தெரிவித்தார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அப்போது 1526 கோவில்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!