கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு – முகமது பின் சல்மான் பகீர் பேட்டி..!


துருக்கி பத்திரிக்கையாளர் ஜமால் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு என்று சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோகி (59), என்ற பத்திரிகையாளர் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். தூதரகத்துக்குள் சவுதி அரேபியாவை சேர்ந்த கூலிப்படையினரால் கொல்லப்பட்டார் என்று பல தரப்பிலும் எழுந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்ததால் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இந்தச் சம்பவம் நடந்து வரும் அக்டோபருடன் ஓராண்டு ஆகும் நிலையில், அமெரிக்க பொது ஒலிபரப்புத் துறை சார்பில் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.


அதில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தனது மேற்பார்வையில் நடந்ததால் கசோகி மரணத்துக்கு தானே பொறுப்பு எனக் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முதலில் கசோகி கொலையை மறுத்து வந்த சவுதி, பின் தங்கள் நாட்டின் தூதரகத்தில் தான் கொலை நடந்ததாக ஒப்புக்கொண்டது. ஆனால் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் அந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டார் என்பதை மறுத்து வந்தது.

இந்நிலையில், முதல் முறையாக பேட்டி ஒன்றில் தானே பொறுப்பு என்று முகமது பின் சல்மான் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!