ரணிலின் வேட்பாளர் கனவு கலைந்தது.. களத்தில் குதித்த சஜித பிரேமதாச


இலங்கை அதிபர் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக சஜித பிரேமதாச போட்டியிட உள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார்.

ஜேவிபி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்தது.

ரணிலைப் பொறுத்தவரையில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பியதாக கூறப்பட்டது. அதேபோல் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் பொதுவேட்பாளராக களமிறங்கும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ரணில் போட்டியிட்டால் தமிழர் வாக்குகளை அள்ள முடியும் என்பது அவரது நம்பிக்கை. ரணிலை போட்டியிடவிடாமல் சிறைக்கு அனுப்பினால் தாம் எளிதாக வெல்ல முடியும் என்பது சிறிசேனாவின் கணக்கு. ஆனால் இந்த இரண்டும் நிறைவேறாமல் போயிருக்கிறது.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித பிரேமதாச வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். முன்னாள் அதிபர் பிரேமதாசவின் மகன் சஜித என்பதும் குறிப்பிடத்தக்கது. தமது ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி தமது பலத்தை வெளிப்படுத்தி அதிபர் வேட்பாளராக முன்னேறியிருக்கிறார்ர சஜித.

களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சஜித பங்கேற்று பேசுகையில், யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு நான் அதிபர் வேட்பாளராகவில்லை. எனக்கு சுயமரியாதை இருக்கிறது என ஆவேசமாக ரணிலை மறைமுகமாக சாடி பேசினார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!