பாஜக சின்மயானந்த் மீது புகார் கூறிய சட்ட மாணவி நண்பர்களுடன் திடீர் கைது..!


“நான் 5 கோடி ரூபாய் கேட்டேன் என்று சின்மயானந்த்தின் வக்கீல் சொல்கிறார். அது சுத்த பொய். அதை விசாரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்த சட்டக்கல்லூரி மாணவி தற்போது திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவாமி சின்மயானந்த்.. இவருக்கு வயது 72 ஆகிறது. பாஜக மூத்த தலைவர்.. முன்னாள் மத்திய அமைச்சரும்கூட.. உத்திரபிரதேசத்தில் ஆசிரமங்கள், கல்லூரிகளை நடத்தி வருபவர். கடந்த மார்ச் 23-ம் தேதி, சின்மயானந்த் நடத்தி வரும் சட்ட கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டம் படிக்கும் மாணவி ஒருவர் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதில், சாந்த் சமூகத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், வெளியில் சொன்னால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பதிவிட்டிருந்தார். ஆனால் இந்த புகாரை சொல்லிய மறுநாளே அந்த மாணவி காணாமல் போய்விட்டார்.

இதனால், மாணவியின் தந்தை, ஷாஜகான்பூர் போலீசில் சின்மயானந்த் மீது புகார் தந்ததுடன், மகளை சின்மயானந்த் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, சின்மயானந்த் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், மாயமான மாணவி ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இது சம்பந்தமாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, முதல்முறையாக செய்தியாளர்களிடம் சில தினங்களுக்கு பேசும்போது, தனது முகத்தை கருப்பு துணியால் மூடியிருந்தவாறே சொன்னதாவது:

“சுவாமி சின்மயானந்த் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். ஒரு வருஷமாக என்னை உடல்ரீதியாக பயன்படுத்திக்கொண்டார். சின்மயானந்த் செய்த குற்றச்சாட்டுகளுக்கான வீடியோ ஆதாரம் உட்பட என்னிடம் நிறைய இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அதை அளிப்பேன்” என்றார். இதையடுத்து, கடந்த 20ம் தேதி சின்மயானந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, சின்மயானந்தா தன்னை எவ்வாறு எல்லாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்பது குறித்து போலீசாரிடம் மாணவி வாக்குமூலம் அளித்திருந்தார். “நிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’.. என்ற மாணவியின் வாக்குமூலம் தி பிரிண்ட் இணைய இதழில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், புகாரும், பகிரங்க வாக்குமூலமும் அளித்த சட்டக்கல்லூரி மாணவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சின்மயானந்த்தை பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சட்டக்கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே இந்த புகார் குறித்து மாணவி சொல்லும்போது, “நான் 5 கோடி ரூபாய் கேட்டேன் என்று சின்மயானந்த்தின் வக்கீல் சொல்கிறார். அது சுத்த பொய். அதனால் அதை பற்றியும் விசாரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். புகாரை விசாரிக்க வேண்டும் என்று சொன்ன மாணவியே தன்னுடைய நண்பர்களுடன் கைதாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!